இந்த காலகட்டத்தில் ஸ்க்ரீன் முழுக்க ஒரு நடிகரை நூறு நடிகராக காட்டுவது சுலபம். அப்படி இருக்கையில் டபுள் ஆக்ஷன் படம் எல்லாம் ஒண்ணுமே கிடையாது. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. ஆனால் இதையே ஒரு 80 ஆண்டுகளுக்கு முன்னர் ஓட்டி பாருங்கள்... மலைப்பாக இருக்கும்.
எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் எல்லாம் தொடங்கிய இரட்டை வேடங்கள் படங்கள் ரஜினி - கமல், அஜித் - விஜய், தனுஷ் - சூர்யா வரை சர்வ சாதாரணமாகிவிட்டது ஆனால் இப்படங்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கிய ஒரு படம் என்றால் அது 1940ம் ஆண்டு டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன், டி.எஸ். பாலையா, எம்.வி. ராஜம்மா, டி.ஏ.மதுரம், காளி. என். ரத்னம் உள்ளிட்ட ஏராளமானோர் நடிப்பில் வெளியான 'உத்தம புத்திரன்' திரைப்படம் தான். இந்த டபுள் ஆக்ட் படங்களுக்கு எல்லாம் தாத்தாவாக விளங்கிய இப்படம் வெளியாகி 84 ஆண்டுகளாகி விட்டது.
தன்னுடைய அசாதாரணமான நடிப்பால் ரசிகர்களை பிரமிக்க வைத்தவர் பி.யு.சின்னப்பா. இருப்பினும் அவரின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அப்படி இருக்கையில் மிகுந்த மனவேதனையில் தனிமையில் தவித்த பி.யு.சின்னப்பாவிற்கு, மாடர்ன் தியேட்டர்ஸ் ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்கியது. இயக்குநர் டி.ஆர்.சுந்தரம், பி.யு.சின்னப்பாவிற்கு பிரகாசமான ஒரு வாழ்க்கை காத்திருக்கிறது என நம்பிக்கையான வார்த்தைகளை சொல்லி அவரை உற்சாகப்படுத்தினார். படமும் முடிந்து வெளியானது. பி.யு.சின்னப்பா படம் திரையரங்கில் வெளியானது மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே வெளியான இப்படம் எங்கும் ஹவுஸ்புல் காட்சிகளாக களை கட்டியது. அந்த காலகட்டத்திலேயே ஐந்து லட்சம் வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு கொடுத்துள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக அந்த காலத்திலேயே ஒரு படத்தை எடுக்க முடியுமா என்றால் அது மர்டர்ன் தியேட்டர்ஸால் மட்டுமே சாத்தியம். இப்படம் பி.யு.சின்னப்பாவுக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட் படமாக அமைந்தது. தமிழ் சினிமாவின் டபுள் ஆக்டிங் செய்த முதல் ஹீரோ பி.யு.சின்னப்பா தான் என்ற பெருமையை பெற்றார்.
அந்த காலத்திலேயே ‘தி மேன் இன் தி அயன் மாஸ்க்’ என்ற ஆங்கில படத்தின் தழுவல் தான் 40'ஸ் 'உத்தமபுத்திரன்' திரைப்படம் என்பது அப்போதைய மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்படி அவர்களுக்கு அது தெரிந்து இருந்தால் அவர்களின் பாராட்டுக்கள் வேற லெவெலில் இருந்து இருக்கும். இப்படத்தை காப்பி அடித்து பல படங்கள் அதற்கு பின்னர் வெளியாகி இருந்தாலும் 40ஸ் உத்தமபுத்திரனை அடித்து கொள்ளவே முடியவில்லை.