நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள், பணி நியமனங்கள் தள்ளி வைக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சியின் பணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என, அதன் உறுப்பினர் ஆரோக்கிய ராஜ் தெரிவித்துள்ளார். 


தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஐஏஎஸ், அனைத்து கூடுதல் தலைமைச் செயலாளர்களுக்கும் துறை செயலாளர்களுக்கும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.


அதில், ’’நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் எந்த வகையிலும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை பாதிக்காது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், எஸ்எஸ்சி எனப்படும் ஆள் சேர்ப்பு வாரியம் ஆகிய தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் செயல்பாடுகளில் எந்தவித சிக்கலும் இருக்காது.


குறிப்பாக வழக்கமான தேர்வுகளை நடத்துவது, பதவி உயர்வுகளை வழங்குவது ஆகியவற்றில் சிக்கல் எதுவும் இருக்காது. அதே நேரத்தில் தன்னாட்சி அங்கீகாரம் பெறாத அமைப்புகள், தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்’’ என்று தெரிவித்து இருந்தார்.






இதைக் குறிப்பிட்டு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கிய ராஜ் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வழக்கமான பணிகளுக்கு எந்த சிக்கலும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனம்


டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இதற்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி, தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்வு செய்யும்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். இதற்கு 4 உறுப்பினர்கள் மட்டுமே இருந்த நிலையில், இன்று புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 


தலைவர் பதவி காலி


எனினும் டிஎன்பிஎஸ்சி தலைவர் இதுவரை நியமிக்கப்படாததால், ஆணையத்தின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. குரூப் 4 தேர்வு அறிவிப்பு, குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் ஆகியவை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வெளியானது நினைவுகூரத் தக்கது.