டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் நேர்முகத் தேர்வு முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 


‘’தமிழக அரசின் வேளாண்துறையில் வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு காட்டப்பட்டிருக்கிறது. அரசுப் பணிகளுக்கான ஆள்தேர்வில் முறைகேடு செய்வதற்கான கருவியாக நேர்முகத் தேர்வுகள் பயன்படுத்தப் படும் நிலையில், அதை ரத்து செய்வதற்கு தமிழக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது  ஆகும்.

வேளாண் துறையில் 52 வேளாண் அதிகாரிகள், 87 தோட்டக்கலை அதிகாரிகள், 20 வேளாண் உதவி இயக்குனர்கள் என மொத்தம் 159 பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 12.01.2023ஆம் நாள் அறிவிக்கை வெளியிட்டது.


மதிப்பெண்களில் சர்ச்சை


அப்பணிகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த ஆண்டு மே 20, 21 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டு, நவம்பர் மாதத்தில் அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதற்குப் பிறகு 6 மாதங்கள் கழித்து கடந்த 20, 21, 22 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள்தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

வேளாண் அதிகாரிகள், தோட்டக்கலை அதிகாரிகள் உள்ளிட்ட பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் எழுத்துத் தேர்வுக்கு 450 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வுக்கு 60 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டன. எழுத்துத் தேர்வில் சரியான விடைகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில், நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரர்களைப் பொறுத்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும், மதிப்பெண்களை வழங்குவதில் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதற்கு பதிலாக, பாகுபாடு காட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எடுத்துக்காட்டாக, தோட்டக்கலை அலுவலர் பணிக்கான நேர்முகத்தேர்வில் மொத்தம் 172 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 45 பேருக்கு அதிகபட்சமாக 45 மதிப்பெண்களும், 3 பேருக்கு குறைந்த அளவாக 27 மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளன. அதில் எந்த குறையும் கூற முடியாது. ஆனால், எழுத்துத் தேர்வில் மிகக்குறைந்த அளவாக 241 மதிப்பெண் மட்டுமே எடுத்த ஒருவருக்கு 45 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. 300க்கும் குறைவான மதிப்பெண் எடுத்த மூவருக்கும் நேர்முகத் தேர்வில் 45 மதிப்பெண் கிடைத்துள்ளது.

அதேநேரத்தில் எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பலருக்கு நேர்முகத் தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது. தோட்டக்கலை அதிகாரிகள் பணிக்கான எழுத்துத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த தேர்வர்களின் மதிப்பெண்கள் முறையே 367.50, 361.50, 358.50 ஆகும். இந்த மூவருக்கும் நேர்காணலில் தலா 36 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன.


சமூகம்தான் மதிப்பெண்களை தீர்மானிக்கிறதோ?


எழுத்துத் தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெற்றவர்கள் நேர்காணலில் எப்படி குறைந்த மதிப்பெண்களை பெற முடியும்? என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் அதே வேளையில், அந்த மூவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. நேர்முகத்தேர்வில் தேர்வர்கள் அளித்த விடைகளை விட, அவர்கள் சார்ந்த சமூகம்தான் மதிப்பெண்களை தீர்மானிக்கிறதோ? என்பதுதான் அந்த ஐயம். அந்த ஐயத்தை போக்க வேண்டிய தமிழக அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சியின் கடமையாகும்.

நேர்முகத் தேர்வில் ஓவ்வொருவரும் அளித்த பதில்களில் அடிப்படையில்தான் மதிப்பெண்கள் வழங்கப் பட்டன என்ற வழக்கமான விளக்கத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அளிக்கலாம். எழுத்துத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களில் ஏதோ ஒருவர் நேர்முகத் தேர்வில் சரியாக விடையளிக்கவில்லை என்றால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், மூவருமே சரியாக விடையளிக்கவில்லை; மூவரும் ஒரே இட ஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதை நம்ப முடியவில்லை. அதுமட்டுமின்றி, இந்த மூவரில் இருவருக்கு எட்டாம் எண் மேசையில் நேர்காணல் நடத்தப்பட்டிருக்கிறது என்பது நேர்முகத் தேர்வில் பல்வேறு காரணிகளால் பாகுபாடு காட்டப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை உறுதிப்படுத்துகிறது.


நேர்முகத் தேர்வுகளில் பாகுபாடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேர்முகத் தேர்வுகளில் பாகுபாடு காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்தக் குற்றச்சாட்டைத் தவிர்க்க அனைத்து நிலை பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்.


ஆந்திர மாநிலத்தில் கூட குரூப் 1 உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் நேர்முகத்தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டது. தமிழகத்திலும் கூட குரூப் 2 பணிகளுக்கு நேர்முகத்தேர்வுகள்  கடந்த மாதம் 24ஆம் தேதி ரத்து செய்யப்பட்டு விட்டன. அவ்வாறு இருக்கும் போது, பிற பணிகளுக்கான நேர்முகத் தேர்வுகளையும் ரத்து செய்வதில் என்ன சிக்கல் ஏற்படப் போகிறது? என்பது தெரியவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆள்தேர்வுகள் ஐயத்திற்கு அப்பாற்பட்டவையாக இருக்க வேண்டும். அத்தகைய நம்பகத் தன்மையை ஏற்படுத்த அனைத்துப் பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். வேளாண் அதிகாரி, தோட்டக்கலை அதிகாரி பணிகளுக்கான நேர்முகத் தேர்வுகளில் முறைகேடு நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இந்த நேர்முகத் தேர்வுகளின்போது செய்யப்பட்ட காணொலி பதிவுகளை பொதுமக்களின் பார்வைக்காக தேர்வாணையம் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்’’.


இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.