டிஎன்பிஎஸ்சி அமைப்பின் தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்ததாகவும், சம்பந்தப்பட்ட கோப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
டிஎன்பிஎஸ்சி அமைப்பு


டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். இதில் தற்போது தலைவர் பணியிடம் காலியாக, நிரப்பப்படாமல் உள்ளது. அதேபோல டிஎன்பிஎஸ்சியில் தற்போது 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் ஐஏஎஸ் (ஓய்வு), பொறுப்பு தலைவராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 ஆகக் குறைந்துள்ளது. 


ஜூன் மாதம் ஓய்வு பெற்ற சைலேந்திர பாபு 


1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு. நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநராக அதாவது சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக இருந்தவர். சைலேந்திர பாபு கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி அன்று ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கான தமிழக அரசு உயர்மட்டக் குழுவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் தகவல் கசிந்தது. 


இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி அமைப்பின் தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்ததாகவும், சம்பந்தப்பட்ட கோப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளுநர் சில விளக்கங்களைக் கோரிய நிலையில், தமிழக அரசு ஒப்புதல் அளித்த பிறகும், ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. 


டிஎன்பிஎஸ்சி பணியில் தொடரும் தொய்வு


டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாட்டின் அரசுத் துறைகளுக்குத் தேவையான ஊழியர்களைப் போட்டித் தேர்வு நடத்தி  நியமனம் செய்து வருகிறது. ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஆட்களைத் தேர்வு செய்வது டிஎன்பிஎஸ்சியின் முக்கியப் பணியாகும். எனினும் இதற்குத் தலைவர் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால் தேர்வுகள், தேர்வு முடிவுகள் வெளியீடு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 


நட்ராஜ் வழியில்... 


முன்னதாக ஓய்வுபெற்ற டிஜிபி நட்ராஜ், 2012ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டார். தன்னுடைய பதவிக் காலத்தில் வெளிப்படைத் தன்மை, ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிப்பது, தேர்வு மையங்களில் கேமரா பொருத்தம், ஆன்லைனில் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்தார். அவரின் வழியில், சைலேந்திர பாபுவும் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட கோப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.