துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் கிங் ஆஃப் கொத்தா படத்தின் இரண்டாவது பாடலான என் உயிரே ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மலையாள நடிகரான துல்கர் சல்மான் அனைவரும் விரும்பும் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவரின் நடிப்பில் கடந்த ஆண்டுகளில் வெளிவந்த ஹே சினாமிகா, சல்யூட், சீதாராமம் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தன. 


திரைப்படங்களையும் தாண்டி துல்கர் சல்மான் நடித்த ஃபேமிலி மேன் மற்றும் ஃபார்சி வெப் தொடர்களும் நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக டி.கே. இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்த கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் தொடரும் கடந்த 18-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த வெப் தொடர் பாசிட்டிவான கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது. 


இதற்கிடையே துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் கிங் ஆஃப் கொத்தா படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியானது. 1980-ஆம் ஆண்டுகளில் நடைபெறும் கதையாக எடுக்கப்பட்டுள்ள கிங் ஆஃப் கொத்தாவில், ராஜு என்கிற ராஜேந்திரன் எனும் பாத்திரத்தில் கேங்ஸ்டராக துல்கர் சல்மான் நடித்துள்ளார். இதில், ஐஸ்வர்யா லக்ஷ்மி, செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, அனிகா சுரேந்திரன், சாந்தி கிருஷ்ணா, சரண் சக்தி, ராஜேஷ் சர்மா, சார்பட்டா பரம்பரையில் டான்ஸிங் ரோசாக இருந்த சபீர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் கிங் ஆஃப் கொத்தா படத்தை துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளன. பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஓணம் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் நேற்று வெளியான என் உயிரே பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும், துல்கர் சல்மானும் கண்களால் காதலை கூறும் விதமாக இருக்கும் என் உயிரே பாடலை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.


பாடலில் இடம்பெற்றுள்ள ”என் உயிரே உன் விழியில் கண் பார்க்குதே...உன் அழகில் என் விழிகள் பூப்பூக்குதே... என் விழிகள் உன் வருகையை தான் பார்க்குதே” என்ற வரிகள் ரசிக்க வைத்துள்ளன. சத்யப்பிரகாஷ் பாடியுள்ள என் உயிரே பாடலுக்கு ஷான் ரஹ்மான்  இசை அமைத்துள்ளார். 



மேலும் படிக்க: Rajini: அயோத்தியில் சூப்பர் ஸ்டார்...! அயோத்திக்கு வருவதே தனது நீண்ட நாள் ஆசை என்ற ரஜினி