டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பாக ஆளுநர் கேட்டுள்ள கேள்விகளுக்கு, விரைவில் தமிழக அரசு சார்பில் பதில் கொடுக்கப்படும் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்ச நீதிமன்றம் கூறிய வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, தமிழ்நாடு அரசின் கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பினார். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்தும் ஆளுநர் விளக்கம் கேட்டு இருந்தார். அதேபோல தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா? எனவும் அரசுக்கு ஆளுநர் கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியானது. டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் ஓய்வுக்கான உச்ச வரம்பு 6 ஆண்டுகள் அல்லது 62 வயது என்ற சூழலில், 61 வயது நபரை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஆளுநர் கேட்டதாகவும் தகவல் வெளியானது.


இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பாக ஆளுநர் கேட்டுள்ள கேள்விகளுக்கு, விரைவில் தமிழக அரசு சார்பில் பதில் கொடுக்கப்படும் என தமிழக அரசு அதிகாரிகள் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. 


தொடரும் மோதல் போக்கு


தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து, மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் மோதல் போக்கு நிகழ்ந்து வருகிறது. நீட் விலக்கு மசோதா, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா என பல்வேறு கோப்புகளை சர்ச்சை காரணமாக ஆளுநர் நிறுத்தி வைத்தார். 


பொது பாடத்திட்டத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை


இதைத் தொடர்ந்து தமிழகத்தில் செயல்படும் பல்கலைக்கழகங்கள் பொதுப்பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டியதில்லை என, அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கோவை தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கத் தலைவர் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதியுள்ளார்.


கடிதத்தில், ''பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லுாரிகள் தாங்களே பாடத்திட்டத்தை உருவாக்கிக்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுப்பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை'' என ஆளுநர் ரவி வலியுறுத்தியுள்ளார்.


அதேபோல தற்போது டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்ச நீதிமன்றம் கூறிய வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, தமிழ்நாடு அரசின் கோப்பையும் ஆளுநர் திருப்பி அனுப்பினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 


யாரின் பெயர் பரிந்துரை?


நாகர்கோவிலைச் சேர்ந்த 1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு. இவர் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக இருந்து கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி அன்று ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கான தமிழக அரசு உயர்மட்டக் குழுவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நிலையில், முறையான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி, ஆளுநர் கோப்பை திருப்பி அனுப்பியுள்ளார்.