டிஎன்பிஎஸ்சி தலைவராக 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற்றார். அப்போதில் இருந்து பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணை அண்மையில் வெளியானது. 2026ஆம் ஆண்டில் என்னென்ன போட்டித் தேர்வுகள், உத்தேசமாக எப்போது நடைபெறும் என்று தகவல் வெளியானது.
டிஎன்பிஎஸ்சி அறிமுகம்
இதற்கிடையே 2026ஆம் ஆண்டுக்கான பாடத் திட்டத்தில் மாற்றத்தை டிஎன்பிஎஸ்சி அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் கசிந்தன. எனினும் இந்தத் தகவலை டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் தனியார் நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறும்போது, “அரசுத் துறைகளைப் பொறுத்தவரை, நிதி ஆண்டின் கடைசியில் மார்ச் மாதத்தில்தான் காலி இடங்கள் விவரம் கணக்கெடுக்கப்படும். அதே நேரத்தில் வேறு சில துறைகளில் காலியிடக் கணக்கெடுப்பு வேறு மாதத்தில் நடைபெறும்.
ஒற்றை இலக்கத்தில் காலி இடங்கள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 4, குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளுக்காக நடைபெறும் பதவிகள் தேர்வர்களுக்கு பெரும்பாலும் தெரிந்திருக்கும். அதேநேரம், தொழில்நுட்பத் தேர்வுகளில் காலி இடங்கள் அதிகம் வருவதில்லை. பெரும்பாலான பதவிகளில் காலி இடங்கள் ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கும்.
கடந்த ஆண்டுகளில் 2- 3 ஆண்டுகளுக்கான காலி பணியிடங்களுக்கு சேர்த்து தேர்வு நடத்தப்பட்டன. தற்போது அந்தந்த நிதி ஆண்டுக்கான காலி இடங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஆண்டிலேயே நிரப்பப்பட்டு விடுகின்றன. அதனால், காலி இடங்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதுபோல தெரிகிறது.
காலி இடங்கள் எண்ணிக்கை அதிகரித்தால்…
குறிப்பிட்ட தேர்வுக்கான அறிவிக்கை டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்படும்போது, என்னென்ன பதவிகள், எத்தனை காலி இடங்கள் என்ற முழு விவரமும் இடம்பெறும். புதிய பதவிகள் சேர்ந்தாலோ, காலி இடங்கள் எண்ணிக்கை அதிகரித்தாலோ பிற்சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படும்.
தேர்வர்கள் ஆண்டு தேர்வு அட்டவணையை அடிப்படையாக வைத்து, பொதுவான கல்வித் தகுதி கொண்ட தேர்வுகளுக்கும், தாங்கள் கூடுதலாகப் பெற்றுள்ள சிறப்புக் கல்வித் தகுதி உடைய தேர்வுகளுக்கும் முன்கூட்டியே தயாராவது நல்லது.
பாடத்திட்டத்தில் மாற்றமா?
பாடத்திட்டத்தை பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2026-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் அனைத்தும் தற்போதைய பாடத்திட்டத்தின்படியே நடத்தப்படும்” என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்தார்.