மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த நபரை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Continues below advertisement

மதுபாட்டில்கள் பறிமுதல் மற்றும் கைது

கடந்த டிசம்பர் 16, 2025 அன்று, மயிலாடுதுறை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி தலைமையிலான குழுவினர் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அந்த வழியாக வந்த TN21 BZ 5731 என்ற எண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் டிசையர் காரை மறித்து சோதனையிட்டனர்.

அந்த சோதனையில், காரில் சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த காரில் இருந்து 1248 எண்ணிக்கையிலான 180 மி.லி மது பாட்டில்கள், 192 எண்ணிக்கையிலான 90 மி.லி மது பாட்டில்கள் என மொத்தம் 241.92 லிட்டர் புதுச்சேரி மதுபானங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Continues below advertisement

விசாரணையில், மது கடத்தலில் ஈடுபட்ட நபர் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளார் அருகே உள்ள நெய்வாச்சேரி, பெரியார் நகரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவது மகன் 44 வயதான கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

தொடர்ந்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், கார்த்திக்கேயனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இப்பரிந்துரையை ஏற்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், கார்த்திகேயனை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, டிசம்பர் 30, 2025 அன்று காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி மற்றும் காவலர்கள் கார்த்திகேயனை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

நடப்பாண்டு புள்ளிவிவரங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது காவல்துறை எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளின் விவரங்கள்:

  • பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் - 27 நபர்கள் 
  • மதுவிலக்கு குற்றங்கள் - 14 நபர்கள் 
  • பாலியல் குற்றங்கள் - 05 நபர்கள் 
  • திருட்டு குற்றங்கள் - 03 நபர்கள் 
  • போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை - 01 நபர் 

என மொத்தம் -50 நபர்கள் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பின்வரும் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எவ்வித பாரபட்சமுமின்றி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

*பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடுபவர்கள்.

* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகள்.

* கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள்.

* தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுபவர்கள்.

சமூக அமைதியை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் .