அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் கலந்தாய்வு (பொதுப் பிரிவினருக்கு) இன்று தொடங்கி உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ஆம் தேதி வகுப்புகள் தொடங்க உள்ளன.


தமிழ்நாடு முழுவதும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பி.எஸ்சி., பி.காம்., பி.ஏ., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.சி.ஏ. உள்ளிட்ட இளங்கலை பட்டப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளுக்காக சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில், 2024 – 2025ஆம் கல்வியாண்டில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை மே 6ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 24ஆம் தேதி முடிவடைந்தது.


2.58 லட்சம் பேர் விண்ணப்பம்


அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர, 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருந்தனர்.


இதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவர் படை, பாதுகாப்புப் படை வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மே 28 முதல் 30ஆம் தேதி வரை நடந்தது. அந்தந்த அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடைபெற்ற கலந்தாய்வில், சிறப்புப் பிரிவினர் கலந்துகொண்டனர்.


பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடக்கம்


தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (ஜூன் 10) அந்தந்தக் கல்லூரிகளில் தொடங்குகிறது. தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கலந்தாய்வு 15-ம் தேதி முடிவடையும். தொடர்ந்து இரண்டாம் பொதுக் கலந்தாய்வு ஜூன் 24 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


கல்லூரி வகுப்புகள் எப்போது?


அதேபோல முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஜூலை 3-ம் தேதிதொடங்கும் எனவும் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tngasa.in/


இதையும் வாசிக்கலாம்: Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி இருந்தது?- கட் ஆஃப் குறையுமா? தேர்வர்கள் என்ன சொல்கிறார்கள்?