VK Pandian Retirement: என் இதயத்தில் எப்பொழுதும் ஒடிசா மக்களுக்கு இடம் இருக்கும் என்றும் என் மூச்சில் எப்பொழுதும் குருநாதர் நவீன் பாபு இருப்பார் என்றும் வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வி.கே.பாண்டியன்:
ஒடிசாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து அந்த மாநில மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் வி.கே.பாண்டியன். தனது அபாரமான செயல்பாடுகளால் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய நபராக மாறினார். முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக இருந்தவர் பின்னர், தனது பதவியை ராஜினாமா செய்து பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார்.
10 ஆண்டுகள் பணி இருக்கும் சூழலில், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தவர் கட்சியில் அதிகாரமிக்க நபராக மாறினார். நவீன் பட்நாயக்கிற்கு அடுத்தபடியாக கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருக்கும் வி.கே.பாண்டியன்தான் ஒடிசாவின் வருங்காலம் என்று அந்த பிஜூ ஜனதா தள முக்கிய தலைவர்களும், நிர்வாகிகளும் கூறிவந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு, பிஜூ ஜனதா தளத்தின் அடுத்த தலைவர் என்று கருதப்படும் வி.கே.பாண்டியன், தனது அரசியல் வாரிசு இல்லை என்று அந்த மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் பேசியியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்தல் தோல்வி விமர்சனம்:
தேர்தல் பரப்புரையின் போதே, பாஜகவினர் வி.கே. பாண்டியன் குறித்து பல்வேறு விமர்சனங்களை வைக்க ஆரம்பித்தனர். வி.கே. பாண்டியன், நவீன் பட்நாயக்கை கட்டுப்படுத்துகிறார் என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் , ஒடிசா மண்ணை ஆட்சி செய்யலாமா என்றும் விமர்சனங்கள் வைக்க ஆரம்பித்தனர். மேலும் ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் வெளியான நிலையில், மக்களவையில் ஒரு இடம்கூட BJD கட்சி வாங்கவில்லை. மேலும் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமலும் தோல்வியை தழுவியது BJD கட்சி . இந்நிலையில், BJD கட்சி தோல்விக்கு வி.கே.பாண்டியன் பெயரும் அடிபட ஆரம்பித்தது.
அரசியலில் இருந்து விலகுகிறேன்:
இந்நிலையில், தற்போது முழு நேர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்ததாவது, முழு நேர அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். என் வாழ்நாளில் ஒடிசா மக்களின் அன்பை சம்பாதித்துள்ளது பெரும் பாக்கியம். இங்கு அதிகாரியாக பணியாற்றிய போது , புயல் உள்ளிட்ட காலங்களில் பெரும் சேவைகளை என்னால் செய்ய முடிந்தது. ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்ற தொடங்கிய போது, எவ்வளவு சொத்துமதிப்பு இருந்ததோ, அந்த அளவுதான் தற்போதும் உள்ளது. என் வாழ்நாளில் ஈட்டிய சொத்துக்கள் என்பது ஒடிசா மக்களின் அன்புதான். நான் அரசியலில் இணைந்தது , நவீன் பட்நாயக்கிற்கு உதவி செய்வதற்காக மட்டும்தான்.
”என் மூச்சில் நவீன் பாபு இருப்பார்”
இந்நிலையில், தற்போது அரசியலில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளேன். யாரையும் சிரமத்திற்குள்ளாக்கி இருந்தால் மன்னித்து கொள்ளவும். மேலும், தேர்தலில் எனக்கு எதிரான பரப்பப்பட்ட விமர்சனங்கள் பிஜூ ஜனதா தளத்தின் தோல்வியில் பங்கு வகித்ததற்கு, பிஜூ ஜனதா தளத்தினரிடம் மன்னிப்பு தெரிவிக்கிறேன். நான் எப்பொழுதும், பிஜூ ஜனதா தளத்தினிருக்கு நன்றியுணர்வோடு இருப்பேன். என் இதயத்தில் எப்பொழுதும் ஒடிசா மக்களுக்கு இடம் இருக்கும், என் மூச்சில் எப்பொழுதும் குருநாதர் நவீன் பாபு இருப்பார். அவர் நலமுடன் இருக்க வேண்டும் என ஜெகன் நாதரிடம் வேண்டிக் கொள்கிறேன் என வி.கே. பாண்டியன் வீடியோவில் தெரிவித்தார்.