தமிழ்நாட்டில் 2025ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் 3ஆம் சுற்றுக் கலந்தாய்வுக்கு இன்று முதல் மாணவர்கள் சாய்ஸ் ஃபில்லிங் செய்யலாம் என்று பொறியியல் சேர்க்கை மையம் அழைப்பு விடுத்துள்ளது. 

இதற்கிடையே இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் அப்வார்ட் மூவ்மெண்ட் மூலம் தற்காலிக இட ஒதுக்கீட்டைப் பெற்றவர்கள், ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செலுத்திய கட்டணமும் சான்றிதழ்களும் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 9,633 இடங்களும் பொதுப் பிரிவில் 52,694 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மொத்தமாக 62 ஆயிரத்து 327 இடங்கள் நிரம்பி உள்ளன.

மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வு

பொறியியல் 3ஆவது சுற்றுக் கலந்தாய்வு இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை 5 மணி நடைபெறுகிறது. இந்த நேரத்தில் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம்.

யாரெல்லாம் கலந்துகொள்ள முடியும்?

தர வரிசையில் 1,37,711 முதல் 2,39,299 இடங்களைப்பெற்ற மாணவர்களும் கட் ஆஃப் மதிப்பெண்கள் 143.00 முதல் 77.50 வரை பெற்றவர்களும் இந்தக் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியும்.

இதற்கிடையே மொத்தம் உள்ள 1,73,876 இடங்களில் முதல் கட்டக் கலந்தாய்வில் 26,719 இடங்களும் இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் 54,552 இடங்களும் நிரம்பி உள்ளன. இதன்மூலம் தற்போது மொத்தம் 81,271 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. அதாவது 46.74 சதவீத இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இன்னும் 92605 இடங்கள் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி அறிவியல் மோகம்

முதல் சுற்றுக் கலந்தாய்வில் அதிகபட்சமாக கணினி அறிவியல் சார்ந்த துறைகளில் அதிகபட்சமாக 17,251 இடங்கள் நிரம்பின. மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு சார்ந்த துறைகளில் (இசிஇ) 5179 இடங்களும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் சார்ந்த துறைகளில் (இஇஇ) 1623 இடங்களும் நிரம்பின. குறைந்தபட்சமாக மெக்கானிக்கல் மற்றும் சிவில் சார்ந்த துறைகளில் முறையே 1621 இடங்களும் 735 இடங்களும் மட்டுமே நிரம்பி இருந்தன.

200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற 116 மாணவர்களில் 63 பேர் கணினி அறிவியல் படிப்பையே தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி எண்: 1800-425-0110

இ மெயில் முகவரி: tneacare@gmail.com

கூடுதல் விவரங்களுக்கு: https://www.tneaonline.org/