தமிழகத்தில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், ஜூலை 24ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் (Tamil Nadu Dr. Ambedkar Law University) கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளி, பல்கலை. இணைவுபெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள், ஆகியவற்றில் மூன்றாண்டு எல்எல்பி (LLB) படிப்பிற்கு https://www.tndalu.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூன்று ஆண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப் படிப்பில் (L.L.B) 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாணவர்கள் ஜூலை 24 வரை விண்ணப்பிக்கலாம்.


என்னென்ன படிப்புகள்?


தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், 
பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ்
பிபிஏ எல்எல்பி ஹானர்ஸ்
பி.காம். எல்எல்பி ஹானர்ஸ்
பி.சி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் ஆகிய 4 படிப்புகளும் வழங்கப்படுகின்றன.


என்ன அடிப்படைத் தகுதி?


சீர்மிகு சட்டப் பள்ளியில் எல்எல்பி ஹானர்ஸ் படிப்புகளும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரிகளில் எல் எல்பி படிப்புகளும் கற்பிக்கப்படுகிறது. இதற்கு முறையே குறைந்தபட்சம் 60 சதவீதமும் 45 சதவீதமும் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு முறையே குறைந்தபட்சம் 55 சதவீதமும் 40 சதவீதமும் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.  


விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?


அதேபோல சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். இது எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 ஆகும்.


பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். இது எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 ஆகும். என்ஆர்ஐ மாணவர்கள் 200 டாலர்களைச் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://tndalu.ac.in/pdf/3%20Year%20LL.B%20Degree%20Course%20Notification.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முழு அறிவிக்கையைக் காணலாம்.


கூடுதல் விவரங்களுக்கு: https://www.tndalu.ac.in/ 


தொலைபேசி எண் : 044- 24641919/ 24957414


இவ்வாறு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.