தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த வகுரப்பம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஆசிரியை, 34 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 17 மாணவர்களும், 18 மாணவிகளும் படித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு முதலாம் வகுப்பில் 10 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக தமிழ்மணி பொறுப்பேற்றார். அவர் வந்தபோது பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை எட்டு ஆக இருந்த நிலையில், தலைமையாசிரியர் தமிழ்மணி வீடு வீடாக சென்று மாணவர்களின் பெற்றவர்களிடம் பேசி மாணவர்களை, இதே பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். தொடர்ந்து தலைமையாசிரியர் தமிழ்மணி மீது நம்பிக்கை கொண்ட பெற்றோர்கள் அரசு தொடக்கப்பள்ளியில் பிள்ளைகளை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் பணி மாறுதல் பெற்றுள்ளதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். அப்பொழுது தலைமை ஆசிரியரை பிரிய மனம் இல்லாத மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். இதனை கண்ட தலைமை ஆசிரியரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்நிலையில் இன்று காலை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்மணியை மீண்டும், வகுரப்பம்பட்டி பள்ளிக்கு பணியமர்த்த வேண்டுமென வலியுறுத்தி, மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும், மாணவர்களை பள்ளிக்குள் அனுப்பாமல், பள்ளியின் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மொரப்பூர் வட்டார கல்வி அலுவலர், காவல் துறையினர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தங்களுக்கு தமிழ்மணி ஆசிரியரை மீண்டும் பணியை அமர்த்த வேண்டும், அவர் வந்த பிறகுதான் இந்த பள்ளி நன்கு வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. அவரை நம்பியே மெட்ரிகுலேஷன் படித்த பிள்ளைகளை கூட அரசு பள்ளியில் சேர்த்துள்ளோம். அவரைப் போல் பிள்ளைகளின் மீது கவனம் செலுத்தும் ஆசிரியர்கள் எங்களுக்கு கிடைக்க மாட்டார்கள். எனவே அவரை மீண்டும் இங்கு பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி பேசினார். ஆனால் பணி மாறுதலில் அவர் பெற்றுள்ளதால் இப்போதைக்கு செய்ய முடியாது ஆனால் அவரை பணி மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பெற்றோர்கள், ஆசிரியரை திரும்பவும் பணியமர்த்தும் வரை, நாங்கள் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் தமிழ்மணி ஆசிரியரே தங்கள் பள்ளிக்கு மீண்டும் வேண்டுமென மாணவ, மாணவிகளும் கண்ணீர் விட்டு அழுதனர்.
இதனை அறிந்த தலைமையாசிரியர் தமிழ்மணி நேரில் வந்து மாணவ, மாணவிகளை சமரசம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து கண்ணீர் விட்டு அழுததால், மாணவர்களை கண்டு தலைமையாசிரியரும் கண் கலங்கினார்.
இதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் தலைமை ஆசிரியர்கள் இருவரிடமும் கடிதம் பெற்று, இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மீண்டும் தலைமை ஆசிரியர் இந்த பள்ளிக்கு வரவில்லை என்றால், பிள்ளைகளை வேறுபள்ளிக்கு சேர்த்து விடுவோம் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் தலைமை ஆசிரியர் பணி மாறுதலில் சென்றதால், பிரிய மனம் இல்லாமல் பெற்றோர்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் கண் கலங்கி அழுததும், தன் மீது அளப்பரிய அன்பு வைத்துள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் அன்பை நினைத்து தலைமையாசிரியர் அழுததும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது