கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் திமுகவின் முதல் மேயர் ஆகிய சிறப்புகளுடன் பதவியேற்ற கல்பனா ஆனந்தகுமார் இரண்டே ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கல்பனா பதவியேற்ற போது எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர், பேருந்தில் சென்னை சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தவர் ஆகிய நேர்மறையான அவரது பிம்பங்கள், மேயராக பதவியேற்ற பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்தது. மேயராக பொறுப்பேற்றவுடன் திமுக கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் செயல்பட்டது, மாநகராட்சி மண்டல தலைவர்களுடன் இணக்கமாக இல்லாமல் மோதல் போக்குடன் செயல்பட்டது, நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் முறையாக வேலை பார்க்காமல் இருந்தது உள்ளிட்ட தொடர் புகார்கள் எழுந்தன. கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் சந்தை வசூல் செய்தது, ஒப்பந்ததாரர்களிடம் கமிசன் கேட்டது, பக்கத்து வீட்டை பெண்ணை காலி செய்ய தொல்லை கொடுத்தது என அடுத்தடுத்து சர்ச்சைகளிலும் சிக்கினார். இதன் காரணமாக அவரை ராஜினாமா செய்ய கட்சி தலைமை அறிவுறுத்தியது. இதனையடுத்து உடல் நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.




மேயர் தேர்தல் எப்படி நடக்கும்?


மேயர் கல்பனா ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கும் நிலையில், வரும் 8 ம் தேதி திங்கட்கிழமை கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா கடிதம் உறுப்பினர்கள் முன்னிலையில் கூட்டத்தில் வைக்கப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளபட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்படும். பின்னர் அவரது ராஜினாமா குறித்த விபரம் நகராட்சி நிர்வாக துறைக்கு அனுப்பபட இருக்கின்றது. பின்னர் அங்கிருந்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பபட்ட பின்னர், மேயர் தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும். பின்னர் திமுக தலைமை ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும். தேர்தல் நாளில் மாமன்ற உறுப்பினர்கள் மேயரை தேர்வு செய்வார்கள். திமுக பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், திமுக வேட்பாளர் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அடுத்த ஒரு மாத காலத்திற்குள் கோவை மாநகராட்சியின் புதிய பெண் மேயர் யார் என்பது தெரியவரும்.


அடுத்த மேயர் யார்?


இதனையடுத்து சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அனுபவம் வாய்ந்த ஒருவரை கோவை மாநகராட்சி மேயராக தேர்வு செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்டு 100 வார்டுகள், ஆறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டு வருகின்றது. மாநகராட்சி குறித்து அனுபவம் வாய்ந்த ஒருவர் மேயராக இருந்தால் மக்களின் தேவைகள் குறைகளை உடனடியாக தீர்க்க முடியும் என்பதால் சீனியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.


கோவை மாநகராட்சியின் மத்திய மண்டல தலைவராக உள்ள மீனா லோகு, கிழக்கு மண்டல தலைவராக உள்ள இலக்குமி இளஞ்செல்வி, மேற்கு மண்டல தலைவராக உள்ள தெய்வானை, மாநகராட்சி கல்வி குழு தலைவர் மாலதி, கோவை மாநகராட்சி 27 வது வார்டு கவுன்சிலர் அம்பிகா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. இவர்களில் ஒருவருக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்குமா அல்லது வேறு ஒருவருக்கு வாய்ப்பு வழங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.