பள்ளிகளில் பணியாற்ற இடைநிலை ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக ஜூன் 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜூலை 21ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும் நிலையில், 1768 இடைநிலை ஆசிரியர் காலி இடங்களை நிரப்பத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தற்போது தற்காலிக ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவதற்கான அரசாணை எண் 149, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.


இதற்கிடையே 2024 பிப்ரவரி மாதத்தில் இடைநிலை ஆசிரியர்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டது. பள்ளிக்கல்வித்‌ துறையில்‌ தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ நேரடி நியமனம்‌ மூலம்‌ இடைநிலை ஆசிரியர்‌ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


என்ன காரணம்?


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 15 வரை நேரம் வழங்கப்பட்டு இருந்த நிலையில், அவகாசம் மார்ச் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் தேர்வு நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜூலை 21ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


தொலைபேசி எண்: 1800 425 6753 (Toll Free) (10:00 am – 05:45 pm)

 இ - மெயில் முகவரி: trbgrievances@tn.gov.in

 

கூடுதல் விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/