அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நடத்தப்படும் உதவிப் பேராசிரியர் தேர்வு 4 ஆயிரம் காலி இடங்களுக்கு நடத்தப்பட உள்ள நிலையில், அதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் என்னவென்று பார்க்கலாம்.
4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கு மார்ச் 28 முதல் தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், மே 15 கடைசித் தேதியாக இருந்தது. இதற்கான தேர்வு ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறலாம் (உத்தேசத் தேதி) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் எப்படி இருக்கிறது?
தேர்வு முறை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
* எழுத்துத் தேர்வு முதுகலை பட்டப் படிப்பு தரத்தில் இருக்கும். 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
* முதல் தாள் 100 மதிப்பெண்களுக்கும் இரண்டாம் தாள் 100 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.
* இதில், முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள்கள், பிரிவு ஏ, பிரிவு பி எனப் பிரித்து 50, 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இவை முறையே எம்சிக்யூ எனப்படும் பல்குறி வகையிலும், விவரித்து எழுதும் வகையிலும் நடத்தப்படும்.
* எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு நடத்தப்படும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டியது அவசியம்.
* தொடர்ந்து நேர்காணல் தேர்வு 30 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். 5-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் எனில், 2 மடங்கு நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். 5-க்கும் குறைவான காலியிடங்கள் எனில், 3 மடங்கு நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
அதேபோல அரசுக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வருவோருக்கு ஓராண்டுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்கப்படும். இவ்வாறு அதிகபட்சம் 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
பாடத்திட்டம் என்ன?
2019 டிஆர்பி அறிவிக்கையில், 73 பாடங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த முறை 65 பாடங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இந்த 65 பாடங்களும் 49 துறைகளாக இணைக்கப்பட்டு, எழுத்துத் தேர்வில் கேட்கப்பட உள்ளன.
பயோடெக்னாலஜி, பயோகெமிஸ்ட்ரி, கணினி அறிவியல், காமர்ஸ், பொருளாதாரம், மின்னணு மற்றும் தொலைதொடர்பியல், கல்வி, சூழல் அறிவியல், இந்தி, வரலாறு, ஊடகம், கணினி, இயற்பியல், விஸ்காம், மொழிப் பாடங்கள், விலங்கியல் ஆகிய பாடங்களுக்குத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இதுதொடர்பாக விரிவாக அறிய https://trb.tn.gov.in/admin/pdf/1492415566AP%20Notification%20Final%2013.03.2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தொலைபேசி எண்கள்: 1800 425 6753 (10:00 am – 05:45 pm)