கொரோனாவுக்கு பின் தியேட்டர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. முதல் மற்றும் இரண்டாவது அலையின்போது கிட்டதட்ட ஓராண்டுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.


நஷ்டத்தில் பி.வி.ஆர்.


மேலும் இந்த காலக்கட்டத்தில் ஓடிடி தளங்களின் பயன்பாடும் அதிகரித்த நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்து விட்டது. இதன் காரணமாக தியேட்டர்களுக்கு மக்கள் வருகை என்பது பாதிக்கும் குறைவாக குறைந்து விட்டது. 


இதனிடையே இந்தியா முழுவதும் தியேட்டர்களை நிர்ணயிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக பிவிஆர் 2024 ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.130 கோடி நஷ்டத்தை சந்த்துள்ளது. கடந்த நிதியாண்டில் நஷ்டம் ரூ.333 கோடியாக இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. அதேபோல் பி.வி.ஆர். ஐநாக்ஸின் வருவாய் ரூ.1,143 கோடியில் இருந்து ரூ.1, 256 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக 2024 ஆம் ஆண்டு நிதியாண்டில் வருவாய் ரூ.3,751 கோடியில் இருந்து ரூ.6,107 கோடி ஆக எகிறியுள்ளது. 


இதனை எல்லாம் கருத்தில் கொண்டு 2025 ஆம் நிதியாண்டில் பல்வேறு திட்டங்களை ஒட்டுமொத்த வருவாயை உயர்த்த பிவிஆர் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதன்படி சரியாக செயல்படாமல் இருக்கும் சுமார் 70 தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளது. மேலும் சரியாக மக்கள் எதிர்பார்க்கும் இடங்களில் 120 தியேட்டர்களை திறக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தங்களுடைய கவனம் தென்னிந்தியாவின் சந்தையில் அதிகளவில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. 


கடன் இல்லாமல் இருப்பது இலக்கு:


சுமார் 25% அளவில் செலவீனத்தை குறைக்கும் வகையில் வாடகை ஒப்பந்தங்கள் மற்றும் செயல்பாட்டு செலவீனங்களை குறைக்க திட்டமிட்டுள்ளது. வரும் நிதியாண்டில் கடன் இல்லாமல் இருப்பது இலக்கு என தெரிவித்துள்ளது. இதற்காக மூவி பாஸ்போர்ட் என்ற ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதன்மூலம் வார நாட்களில் மக்களை தியேட்டருக்கு அழைத்து வர திட்டம் போடப்பட்டுள்ளது. 


மேலும் ஏற்கனவே உள்ள சினிமா லவ்வர்ஸ் டே என்ற புதிய திட்டத்தையும் விரிவுப்படுத்த உள்ளது. இதன் மூலம் தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளை வழங்கவும் முடிவு செய்துள்ளது. பிவிஆர் நிறுவனத்தின் இந்த முடிவு சந்தையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.