பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு 2026ஆம் ஆண்டு 3 முறை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. , 2026ஆம் ஆண்டில் ஜனவரி 2026, ஜூலை 2026, மற்றும் டிசம்பர் 2026 ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த அரசு, டிஆர்பிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைவருக்கும் கட்டாய் கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி, புதுடெல்லி மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி வழக்கின் (SLP) தீர்ப்பாணை பெறப்பட்டது - பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது -சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் தலைமை முகமையாக (Nodal Agency) நியமனம் செய்தும், ஆசிரியர் பணி நியமனம் பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் எனவும் ஆணைகள் வெளியிடப்பட்டன.
அதிக அளவிலான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். தொடர் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு அதிக வாயப்பளிக்கும் பொருட்டு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) நடத்த உரிய ஆணை வெளியிடுமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கோரியுள்ளார்.
தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி / தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் இதுநாள்வரை தகுதி பெறாதவர்கள் என தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வீதம் ஆண்டுக்கு மூன்று முறை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) நடத்துவதன் மூலம் தற்போது பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள், அத்துடன் தற்போது பணிபுரிந்துவரும் ஆசிரியர்களை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) எழுத தயார் செய்யும் வகையில் அவர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மாவட்டந்தோறும் அல்லது வருவாய் வட்டம் அளவில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு வார இறுதி நாட்களில் பணியிடைப்பயிற்சி வழங்கலாம்.
எனவே, இவ்வாசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக கருதி உடனடியாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி தேர்ச்சி பெற வழிவகை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) நடத்தி தொடக்கக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை ஏற்று, தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்காக மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன், 2026ஆம் ஆண்டில் ஜனவரி 2026, ஜூலை 2026, மற்றும் டிசம்பர் 2026 ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்தவும், இது தொடர்பாக உரிய அறிவிக்கைகளை (Notification) வெளியிடவும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.
மேலும், 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளின் ஆய்வுக்குப்பின் மீதமுள்ள தேர்ச்சி பெறவேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 2027 ஆம் ஆண்டில் தேவைக்கேற்ப ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தவும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.