தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் இன்று காலை 11 மணிக்கு வெளியானது தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


கொரோனா தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்காலிக மதிப்பெண் பட்டியலை http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்று முதல் ஆகஸ்டு 31-ம் தேதி வரை மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் வருகின்ற செப்டம்பர் முதல் நாள் தொடங்கி பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாநில சுகாதாரத்துறை பள்ளிகளுக்கான நிலையான நெறிமுறைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகளின்படி பள்ளிக்கு வந்த ஒருவாரத்துக்குள் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மேலும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களும் பிற ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், ஊசி போடும் வயது வரம்பை எட்டிய மாணவர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும் அந்த நெறிமுறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இதுதவிர, வகுப்பறைகள், நூலகங்கள், சத்துணவு சமையல் கூடங்கள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் உட்பட பள்ளி சார்ந்த அனைத்து இடங்களும் தொற்று பாதிப்பு இல்லாமல் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும். மாணவர்கள் அடிக்கடித் தொடும் மேசைகள், பலகைகள் உட்பட அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். வகுப்பறைகளில் ஒவ்வொருவரும் ஆறு அடிதூர இடைவெளி விட்டு நிற்கவேண்டும்.வகுப்பறையில்தான் வகுப்புகள் நடத்த வேண்டும் என இல்லாமல் பெரிய ஹாலில் கூட வகுப்புகள் நடத்தலாம். தட்பவெப்பம் அனுமதித்தால் வெளிப்புறத்தில் கூட வகுப்புகளை நடத்தலாம்.


ஷிஃப்ட் முறையில் வகுப்புகளை நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 50 சதவிகித நபர்களுடன் வகுப்புகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சமூக இடைவெளி விட்டு நிற்பதற்கான அடையாளங்களை பள்ளி வகுப்புகள் உட்பட அனைத்திலும் நடைமுறைபடுத்த வேண்டும். இந்த நெறிமுறைகள் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிக் கமிட்டிகள் என அனைவருக்கும் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.  கைகளை சுகாதாரமாகப் பராமரிப்பது, மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வுகளை பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும்’ என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.  


Valimai Hashtag: வலிமையான இடத்தில் வலிமை... டிரெண்டிங்கை நொறுக்கி எடுத்த தல, தளபதி!