வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு மீண்டும் ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 1 முதல் ஐந்தாம் வகுப்புக்கு ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.


முன்னதாக பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


ஏப்ரலில் முடிந்த தேர்வுகள்


2022- 23ஆம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 28ஆம் தேதியுடன் முடிந்தன. இந்த மாணவர்களுக்கு பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாகத் தேர்வுகள் நடைபெற்றன. ஏப்ரல் 11ஆம் தேதி தேர்வு தொடங்கி, ஏப்ரல் 28ஆம் தேதி நிறைவு பெற்றது. 


மாணவர்களுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு  ஜூன் மாதம் 1-ம் தேதியும் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஜுன் 5-ம் தேதியும் (இன்று) பள்ளிகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். 




எனினும் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி பதிவானது. கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கத் தாமதமாவதால், வெயிலின்  தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு, பள்ளிகள் திறக்கப்படும் தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். 


இதை அடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து,  6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதியும், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 14-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.


மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.