நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.


தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 9,10,11,12ஆம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு பள்ளியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார்.


இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கூறுகையில், “மாலை 3.30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மாஸ்க் போடாமல் வந்தாலோ அல்லது கிழிந்து இருந்தாலோ பள்ளியில் மாஸ்க் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வகுப்பறைதோறும் சானிடைசர் வைத்திருக்க வேண்டும். பெற்றோர்கள், மாணவர்கள் பயப்பட தேவையில்லை. பெற்றோர்கள் தயக்கமின்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பெஞ்சிலும் தலா 2 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள்.  1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்கள் வரமாட்டார்கள் என்பதால், அந்த வகுப்பறைகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும், அடிப்படையான பாடங்கள் தவறாமல் கற்றுத்தரப்படும்” என்று பேசினார்.




பள்ளி மற்றும் கல்லூரி மாணவ , மாணவிகள் வரும் செப்டம்பர் 1 முதல் அடையாள அட்டை , சீருடையுடன் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, கடந்த 18ஆம் தேதி பள்ளி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில், அனைத்து பள்ளிகளிலும் சானிடைசர் வைக்கப்பட்டு, சுகாதார வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா பரவலை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும். மாணவர்கள் கை கழுவும் வசதி, உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யும் கருவி ஆகியவை பள்ளியில் இடம்பெற வேண்டும். முதல் நாளில் 50 சதவீத மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50 சதவீத மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வர வேண்டும்.


கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது. பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இதமான சூழல் இருந்தால் மாணவர்களை பள்ளி வளாகத்தில் அமர வைத்து பாடம் நடத்தலாம்;பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புவதை தடுக்க வேண்டும். பள்ளிவரும் மாணவர்களுக்கு வைட்டமின் சி மாத்திரை, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க வேண்டும். பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் உடல்நிலையை வாரம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 


ABP EXCLUSIVE: வியர்வையில் சார்ஜ் ஆகும் பேட்டரியை கண்டுபிடித்த குழுவில் உள்ள தமிழ் விஞ்ஞானியுடன் நேர்காணல்