பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள 77 அம்சங்களைக் கொண்ட சுற்றறிக்கை: தவிர்க்கப்படவேண்டியவையும் - சேர்க்கப்பட வேண்டியவையும்!


பள்ளிக் கல்வித்துறை, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள 77 அம்சங்களைக் கொண்ட சுற்றறிக்கையில் தவிர்க்கப்பட வேண்டியவை குறித்தும், சேர்க்கப்பட வேண்டியவை குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:


பள்ளிக் கல்வித்துறை மூலம் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு 77 அம்சங்கள் கொண்ட சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் இவையெல்லாம் தேவையே - கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில், மேலும் சில அம்சங்கள் அவற்றில் இடம்பெற வேண்டியது அவசியமாகும்.


வழிபாட்டு முறை என்றால் என்ன?


‘‘63 ஆவது அம்சமாக நாள்தோறும் வழிபாட்டுக் கூட்டம் நடத்தி, ஒரு சில மணித்துளிகள் நல்லொழுக்கக் கல்வி மாணவர்களைச் சென்றடைய உறுதிபடுத்துதல்’’ என்று கூறப்பட்டுள்ளது.


மாணவர்களில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள், மதங்களைச் சேராதவர்கள் உண்டு. அவர்களுக்கு எந்த வகையான வழிபாட்டுக் கூட்டங்களை நடத்தப் போகிறார்கள் என்பது முக்கியம், கருத்தூன்றிக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.


நல்லொழுக்கக் கல்வி என்பது எதைக் குறிக்கும்?


நல்லொழுக்கக் கல்வி என்று கூறப்பட்டுள்ளது. முன்பெல்லாம் Moral Instruction என்ற பெயரில் மாணவர்களுக்கு மதம் சம்பந்தமான ராமாயணம், கீதை போன்ற இதிகாச, புராண கதாநாயகர்களான ராமன், கிருஷ்ணன், அரிச்சந்திரன் போன்றவற்றைச் சொல்லிக் கொடுக்க, அந்த வகுப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.


இப்பொழுதும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளமாட்டார்கள் என்று சொல்ல முடியாது. இது தேவையில்லாமல் மாணவர்கள் மத்தியில் மதக் குழப்பத்தையும், மூடநம்பிக்கைகளையும், மாச்சரியங்களையும்தான் ஏற்படுத்தப் பயன்படும்.


பல மதங்களில், எந்த மத வழிபாடு என்பதும்கூட சிக்கலை ஏற்படுத்தலாம். மாணவர்கள் மத்தியில் மதவாதத்தைத் திணிக்கும் கும்பல் புறப்பட்டு இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.


அரசமைப்புச் சட்டம் கூறும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும்


இவற்றுக்குப் பதிலாக - இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) பிரிவு கூறும் - விஞ்ஞான மனப்பான்மை, சீர்திருத்த உணர்வு, மனிதநேயம் போன்றவற்றை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறப்பட்டுள்ளதை மாணவர்கள் மத்தியில் செயலாக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.


ஜாதியை அடையாளப்படுத்தும் வகையில் கயிறுகள் கட்டக் கூடாது


71 ஆவது அம்சமாகக் கூறப்பட்டு இருக்கும், ‘‘மாணவர்கள் மோதிரம், செயின், கையில் ஒயர் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது. மாணவர்கள் அணிந்துகொண்டு வந்தால், அவர்களின் பெற்றோரை அழைத்து வரச் சொல்லி, விவரத்தைத் தெரிவிக்கவேண்டும்‘’ என்று கூறப்பட்டுள்ளது. இத்தோடு ‘‘ஜாதிகளை அடையாளப்படுத்தும் வண்ணம் தனித்தனி வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டி வருவதை அனுமதிக்கக் கூடாது’’ என்று சேர்த்துக் கொள்ளவேண்டும்.




ஷாகா, யோகா பயிற்சிகளை அனுமதிக்கக் கூடாது


பள்ளி வளாகத்துக்குள் ‘‘ஷாகா, யோகா’’ என்ற பெயரால் மத, மூட நம்பிக்கை தொடர்பான நிகழ்ச்சிகளை யாரும் நடத்திட அனுமதிக்கக் கூடாது.


‘மதச் சார்பற்ற அரசு’ என்ற கண்ணோட்டத்தில் எந்த மதத் தொடர்பான சின்னங்கள், கோவில்களைக் கட்ட அனுமதிக்கக் கூடாது. எந்த மதப் பூஜைகளையும் நடத்திடவும் கூடாது.  அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறும் செக்யூலரிசத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். ஏற்கெனவே அரசின் ஆணையும் இது தொடர்பாக இருப்பதைக் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்.


மேலும், பொது ஒழுக்க நெறிகள், அடிப்படைக் கடமைகள்பற்றி விளக்கவேண்டும். இலக்கிய மன்றக் கூட்டங்களை வாரம் ஒருமுறை நடத்தி மாணவர்களின் பேச்சுத் திறனை வளர்க்கவேண்டும். கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மேற்கண்டவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, புதிய சேர்க்கைகளை இணைக்கவேண்டும்.


கல்லூரிகளிலும், இவற்றைக் கவனத்தில் கொண்டு செயல்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.


இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.