ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. வேறென்ன நீட் விவகாரம் பற்றிதான்! அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டார். சட்ட அமைச்சராக இருந்த சி.வி.சண்முகமும் முதலமைச்சராக இருந்த கே.பழனிசாமியும் ஸ்டாலினுக்கு பதில் அளித்தார்கள். ஆனாலும் ஸ்டாலின் விடாமல் கேள்வி கேட்டார். அப்போது, பரபரப்பை ஏற்படுத்திய உயர் நீதிமன்ற ஆவணத்தைக் கையில் வைத்துக்கொண்டு, அவர் கேள்வி கேட்க, மடங்கி வந்தார்கள், முதலமைச்சரும் சட்ட அமைச்சரும். பலருக்கு நினைவிருக்கலாம், சிலருக்கு மறந்திருக்கலாம் எனும்படியான அந்த வழக்கு, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கேட்கும் மசோதாக்கள் தொடர்பானது. 


அந்த சட்டவரைவு அல்லது மசோதாக்களின் விவரம் என்ன? 
அதிமுக ஆட்சியில் 2017 பிப்ரவரி முதல் நாளன்று, சட்டப்பேரவையில் இரண்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்று, தமிழ்நாடு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேர்க்கைச் சட்டம், 2017. மற்றது, தமிழ்நாடு முதுநிலை மருத்துவம் மற்றும் பல்மருத்துவ சேர்க்கைச் சட்டம், 2017. சட்டப்பேரவை வரலாற்றில் அனைத்து கட்சிகளாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டவரைவுகள் மிகவும் குறைவுதான். அவற்றில் முக்கியமானவையாக இடம்பெற்ற இந்த இரண்டு சட்டவரைவுகளும், ஆளுநரின் மூலமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. 
ஏனென்றால், தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நிறைவேற்றிய இந்த மசோதாக்கள் நாடளவிலான நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டும், மாநில அளவில் பழைய முறைப்படி மாணவர்களை சேர்த்துக்கொள்கிறோம்; அதற்கு அனுமதி தரவேண்டும் என்று கேட்டு இயற்றப்பட்டவை. 
அரசியலமைப்பு முறையின்படி இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால், இங்கு மட்டும் நீட் தேர்வு இல்லாமல் போயிருக்கும். ஏற்கெனவே, ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டபோது, சட்டப்பேரவையில் புது மசோதாவை நிறைவேற்றி, அதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததைப் போல நடந்திருக்கும். ஆனால், குடியரசுத்தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியும் அவருக்கு அடுத்துவந்த இராம்நாத் கோவிந்தும் இரண்டு மசோதாக்களுக்கும் அனுமதி தரவில்லை. 




இதற்கிடையே நடந்த இன்னொரு சம்பவத்தால்தான், உயர் நீதிமன்றத்தில் கல்வியாளர்கள் வழக்கு தொடுத்தார்கள். குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்ட 2 மசோதாக்களுக்கும் அவர் ஒப்புதல் தரவேண்டும் என 2017 ஏப்ரல் 12ஆம் தேதியன்று கல்வியாளர்கள் ஐ.பி.கனகசுந்தரம், பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் கோரிக்கை மனு அனுப்பினார்கள். ஒரு வாரம் கழித்து அவர்களுக்கு குடியரசுத்தலைவர் அலுவலகத்திலிருந்து பதில் வந்தது. அதில், “நீங்கள் குறிப்பிட்டதைப் போல அப்படி எந்த மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பவில்லை.”என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 
அதாவது, பிப்ரவரி முதல் நாளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்று சேர்ந்திருக்கவில்லை. 
அதனால்தான் கல்வியாளர்கள் இருவரும், நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் மசோதாக்களுக்கு 6 மாதங்களுக்குள் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என வழக்கு தொடுத்தனர். அதில் தீர்ப்பு வருவதற்குள் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்தத் தீர்ப்பால் ஒரு பயனும் இல்லை என்பதால், வழக்கு முடித்துவைக்கப்பட்டது என்பதுதான் உண்மை. 
(வந்தாச்சு.. வந்தாச்சு.. கடைசிப் பகுதிக்கு வந்துட்டோம்..!)
அந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழக்கறிஞர் சர்வசாதாரணமாகச் சொன்ன தகவல்தான், அனைவரையும் அதிரவைத்துவிட்டது. ”தமிழ்நாடு அரசாங்கம் 2017 பிப்ரவரி 18 அன்று அனுப்பிய இரண்டு மசோதாக்களையும் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்காமல் (WITHHELD) நிறுத்திவைத்துவிட்டார். அதனால், அதே ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அந்த மசோதாக்களை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. தமிழ்நாட்டு சட்டத்துறைச் செயலாளர் எஸ்.எஸ்.பூவலிங்கம் அதைக் கையொப்பமிட்டு பெற்றுக்கொண்டிருக்கிறார்.” என்பதே, அந்தத் தகவல். 




அதாவது, இதற்கிடையே 2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடந்து, அதில் பாஜக வெற்றிபெற்றும்விட்டது. தேர்தல் பிரச்சாரத்தில்கூட அதிமுக சார்பில், நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதிமுகவோ பாஜகவோ இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதாக எந்த இடத்திலும் காட்டிக்கொள்ளவே இல்லை. இதையொட்டிதான் சட்டமன்றத்தில் ஸ்டாலினும் நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா முதலியவர்களும் திமுக சார்பில் அதிமுகவையும் பாஜகவையும் வெளுத்துவாங்கினார்கள். அதற்கு அதிமுக சொன்ன பதில் எல்லாம் பழங்கதை. 
இப்படி, நீட் தேர்வில் கட்சி அரசியல் மக்களை ஏமாற்றும்படியும் இருக்க, அரசமைப்புச்சட்டமும் இதில் டெல்லிக்கு ஆதரவாகவே இருக்கிறது. 
இப்போது திமுக ஆட்சியில் மீண்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு மசோதாவை நிறைவேற்றி அனுப்புகிறது; அதை ஒருவேளை குடியரசுத் தலைவர் 6 மாதங்களுக்குள் திருப்பி அனுப்பலாம். அப்படிச் செய்தால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மட்டும் சிக்கல் ஆகும். இன்னொரு முறையும் சட்டமன்றம் திருத்தத்துடனோ திருத்தம் இல்லாமலோ நீட் விலக்கு கேட்டு மசோதா அனுப்பினால், குடியரசுத்தலைவர் ஏற்கவும் செய்யலாம்; ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தியும்வைக்கலாம். 
இப்போது இருப்பதைப்போலவே நீளும் துயரமாக நீட் தேர்வு இருக்க, அதை வேண்டாம் எனச் சொல்ல தமிழ்நாட்டு அரசால் முடியாமல் போகலாம். இதைப் பற்றி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 254ஆவது பிரிவு தெளிவாகவே எடுத்துச்சொல்கிறது.