திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி அருள்ராஜ் (33) இவருக்கும் கொங்கரம்பட்டு கிராமத்தை சேர்ந்த புஷ்பலதா( 28) என்பவருக்கும்  கடந்த 4ஆண்டுக்கு முன்பு திருமணமாகி சர்வேஸ்(2) சஞ்சனா(1) என இரு குழந்தைகள் உள்ளனர். 


மேலும் நேற்று இரவு அருள்ராஜ் மற்றும் புஷ்பலதா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த புஷ்பலதா தன்னுடைய 2 குழந்தைகளுடன் , இன்று காலையில் தன்னுடைய சொந்த நிலத்தில் உள்ள  கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 




இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து உயிருக்கு போராடிய புஷ்பலதாவை காப்பாற்றியுள்ளனர். ஆனால் 2 குழந்தைகள் காப்பாற்ற முடியாததால், நீரில் மூழ்கி  பரிதாபமாக சம்பவ இடத்திலேயே குழந்தைகள் பலியாகினர்.  2 குழந்தைகளின் சடலத்தை சுமார் 2மணி நேரம் போராடி, அப்பகுதி மக்கள் மீட்டனர். 


அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த வந்த ஆம்பூலன்ஸ் வாகனத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த புஷ்பலதாவை வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையெடுத்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அதில் 2 குழந்தைகள் இறந்து விட்டதாகவும் கிராம பொதுமக்கள் போலீஸ் விசாரணையில் தெரிவித்தனர். ஆனால், கணவரோ... எங்களுடைய சொந்த நிலத்தில் உள்ள தரை கிணற்றில் மனைவி விவசாயம் செய்து கொண்டிருந்ததாகவும் அப்போது குழந்தைகள் தவறி கிணற்றில் விழுந்ததாகவும், குழந்தைகளை காப்பாற்ற தன் மனைவி கிணற்றில் குதித்ததாகவும் தெரிவித்தார். 


கணவரின் வாக்குமூலமும், பொதுமக்களின் வாக்குமூலமும் வேறு விதமாக இருப்பதால், என்ன மாதிரியான வழக்கு பதிவு செய்வது என்கிற குழப்பத்தில் போலீசார் விழித்து வருகின்றனர். சிகிச்சையில் இருக்கும் தாய் விழித்தால் மட்டுமே குழந்தைகள் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியும் என்பதால், அதை வரை இந்த வழக்கை சந்தேகத்திற்கு உரிய மரணம் என்கிற வகையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 


 




 


இதனிடையே புஷ்பலதாவிடம் நடத்திய விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இவ்வழக்கை கொலை வழக்காக மாற்ற போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப தகராறில் அப்பாவி பிஞ்சு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, உண்மையில் புஷ்பலதா தற்கொலைக்கு முயன்றாரா... அல்லது கணவரே கொலை செய்ய முயற்சித்து ஏதாவது திட்டம் திட்டீனாரா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.