6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று உத்தேச கால அட்டவணை வெளியாகி உள்ளது. இதை சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், அனைத்து அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறப்புப் பள்ளி முதல்வர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறப்படுள்ளதாவது:
’’சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும், தனியார், ஆங்கிலோ இந்தியன், ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறப்புப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2023-24ஆம் கல்வி ஆண்டில் பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் நலன் கருதி, அதற்கான உத்தேச கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவற்றைக் கணக்கில் கொண்டு, மாணவர்களை தேர்வுகளுக்கு தயார் செய்ய வேண்டும்.
10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான யுனிட் தேர்வு எனப்படும் அலகுத் தேர்வு ஜூலை மாதத்தில் நடைபெறும். 2ஆவது அலகுத் தேர்வு ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆகஸ்ட் மாதத்தில் முதல் மிட்- டெர்ம் தேர்வு நடைபெற உள்ளது.
அதேபோல 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 15 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 11 முதல் 22ஆம் தேதி வரையும் நடைபெறுகின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான ஒரு மதிப்பெண் தேர்வு டிசம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வுகள் ஜனவரி 8ஆம் தேதி முதல் தொடங்கப்படுகின்றன. 10ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வுகள் ஜனவரி 22ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளன.
முழு ஆண்டுத் தேர்வு
6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 3ஆவது வாரத்தில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது’’.
இவ்வாறு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதையும் வாசிக்கலாம்: College Fees Refund: இந்த மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பி தாங்க.. யுஜிசி அதிரடி உத்தரவு