தமிழகத்தில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை, சேலம் மாவட்டத்தில் 151 மையங்களில் 37,938 மாணவர்கள் எழுதுகின்றனர். பொதுத்தேர்வு பணிக்காக 3,500 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் நடப்பு 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 8.21 லட்சம் பேர் எழுதும் இத்தேர் வுக்காக 3,316 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், தேர்வுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


TN 12th Exam: பிளஸ் 2 தேர்வு... சேலத்தில் 151 மையங்களில் 37,938 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்


சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, 320 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை 20,206 மணவர்களும், 17,732 மாணவிகளும் என மொத்தம் 37,938 பேர், நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இதில் 932 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சொல்வதை கேட்டு எழுதுபவர் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக சேலம் மாவட்டம் முழுவதும் அரசு மேல் நிலைப்பள்ளிகளில் 151 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். குறிப்பாக, 151 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 151 துறை அலுவலர்கள், 300க்கும் மேற்பட்ட பறக்கும்படை அலுவலர்கள், 3,100க்கும் மேற்பட்ட அறைக்கண்காணிப்பாளர்கள் என 3,500க்கும் அதிகமானோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் கூறுகையில், “சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வினை சிறப்பாக நடத்த பள்ளி தேர்வு மையங்கள் மற்றும் சிறை தேர்வு மையம் என அனைத்து மையங்களிலும் தகுந்த முன்னேற்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இருக்கை வசதி, குடிநீர், தடையில்லா மின்சாரம், சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ஏற்கனவே மாவட்ட அளவிலான முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் காவல்துறை, சுகாதாரத் துறை, மாநகராட்சி, மின் வாரியம், போக்குவரத்து கழகம், தீயணைப்புதுறை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். 


பொதுத்தேர்வு அறைக்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எந்தவித எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து செல்ல அனுமதியில்லை. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் கடும் சுட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆசிரியர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர் அறையில், தங்களது செல்போனை ஒப்படைத்து செல்ல வேண்டும். தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் அமையும் தேர்வு மையங்களில், ஏதேனும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டாலோ உடந்தையாக இருந்து ஊக்கப்படுத்தினாலோ சம்மந்தப்பட்ட மையம் ரத்து செய்யப்படுவதுடன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரைத்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டும் என தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.