அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் வருகைப் பதிவைக் கண்காணிக்க, மீண்டும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவைக் கொண்டு வர பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு நவம்பர் முதல் வாரத்தில் இருந்து பயோ மெட்ரிக் முறை மீண்டும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வருகைப் பதிவைக் கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை


அரசுப் பள்ளிகளில் ஏராளமான தன்னிகரற்ற ஆசிரியர்கள், தனித்துவத்துடன் கற்பித்து வருகின்றனர். அதே நேரத்தில் அரசுப் பணியைப் பயன்படுத்திக் கொண்டு பள்ளிக்கே வராமலும், தாமதமாக வந்தும் சில ஆசிரியர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களைக் கண்காணிக்க, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது.


அந்த வகையில் 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது. இதன்பிறகு அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருவது ஒழுங்குபடுத்தப்பட்டது.


கொரோனா தொற்றால் கைவிடப்பட்ட பயோமெட்ரிக்


தொடர்ந்து உலகம் முழுக்க கொரோனா கொடுந்தொற்று பரவியது. இதனால் பயோமெட்ரிக் முறை தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. எமிஸ் செயலி வழியாக ஆசிரியர்கள் வருகைப் பதிவைப் பதிவு செய்து வந்தனர். அதே நேரத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்னும் பயோமெட்ரிக் பின்பற்றப்படவில்லை.


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் பெண்களுக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு பயோமெட்ரிக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் அரசுப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் பயன்பாடு மீண்டும் தள்ளிப்போனது.


மீண்டும் வரும் வருகைப் பதிவு முறை


இந்த நிலையில் தற்போது மீண்டும் பயோமெட்ரிக் கொண்டு வரப்பட உள்ளது. இதற்குத் தேவையான செயல்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை தொடங்கி உள்ளது.


இதன்படி, பயோ மெட்ரிக் வருகைப்பதிவு பின்பற்றப்பட்ட பள்ளிகளில், கருவிகளின் நிலை என்ன, பயோமெட்ரிக் இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளனவா, புதிதாக பணியில் இணைந்தவர்கள் மற்றும் ஆசிரியர்களில் எவரேனும் சேர்க்கப்படாமல் உள்ளார்களா என்பன உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.


தொடர்ந்து நவம்பர் மாதத்தில் இருந்தோ, அடுத்த ஆண்டில் இருந்தோ பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.