5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகளுக்கு நாளை (மார்ச் 1) முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, பள்ளிக் கல்வித் துறையின் வாயிலாக பல்வேறு முன்னோடித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அறிவுப் பசியைத் தீர்க்க பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு வயிற்றுப் பசியைத் தீர்க்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மெல்லக் கற்கும் குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம், கற்றல் இடைவெளியைக் குறைக்க இல்லம் தேடிக் கல்வி திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


திறன் வகுப்பறைகள், உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள்


மேலும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள் (Smart Class Rooms), அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் (HI- Tech Labs) அதற்குத் தேவையான இணையதள (Broadband Connectivity) வசதியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. 


அதேபோல கட்டணமில்லா பேருந்து சேவை, கற்றல் சாரா செயல்பாடுகளை ஊக்குவிக்க கலைத் திருவிழா, வானவில் மன்றம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினியும் (TAB) வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் உலகத் தரத்தில் கல்வியின் தரம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளிகளில் சேரும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இலவச நோட்டுப் புத்தகங்கள், சீருடை, காலணி, உணவு, எழுதுபொருட்கள் என அனைத்துமே இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. உண்ண உணவு, உடுத்த உடை ஆகியவற்றுடன் தொழில் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு, பல்வேறு விதமான உதவித் தொகைகள், கல்லூரிகளில் உயர் கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.


50-க்கும் மேற்பட்ட திட்டங்கள்


இவை தவிர்த்து, நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், கலைத் திருவிழா, நம் பள்ளி நம் பெருமை, மாணவர் மனசு, நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி, வானவில் மன்றம், அனைவருக்கும் ஐஐடிஎம், மணற்கேணி, தமிழ்க் கூடல், திறனறித் தேர்வுகள், விழுதுகள் உள்ளிட்ட 57 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 


பல்வேறு வகையான உதவித்தொகைகள்


மூன்றாம் பாலினம், மாற்றுத் திறனாளி மாணவர்கள், எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி என பல்வேறு வகையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் நாளை (மார்ச் 1) மாணவர் சேர்க்கையைத் தொடங்க முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.