அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அரசு விதிகளின்படி செயல்பட வேண்டும் என்றும், எவ்வித நிபந்தனைகளின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கையினை திட்டவட்டமாக நிறுத்துதல் கூடாது என்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 
 
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததையொட்டி, பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் கடந்த ஜூன் 14ம் தேதி முதல்  தொடங்கியது.


பள்ளிகளில் வகுப்பு நடத்த அனுமதி கிடையாது என்றும், மாணவர்கள் பள்ளி,கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கைக்கான விண்ணப்பிப்பது அல்லது மாற்றுச் சான்றிதழ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்  என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.




வகுப்புகள் சரியாக நடைபெறாத காரணத்தினாலும், தொடர் ஊரடங்கு காரணமாக தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையாலும், கடந்தாண்டு தனியார் பள்ளிகளை விட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை கூடுதலாக இருந்தது. இந்தாண்டும்,அதே போக்கு  தொடரும் என்று கணிக்கப்படுகிறது. எனவே, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையில்  விதிகளின்படி செயல்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், மாணவர்களின் சேர்க்கையின் போது எவ்விதமான படிவத்துக்கும் கட்டணங்கள் வசூலிக்க கூடாது என்றும் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.  


அனைத்து வகைப் பள்ளிகளிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மேலும், 11ம் வகுப்பில்  மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்கிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்ட  நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அறிவித்தது.   




இதற்கிடையே, முதன்மைக் கல்வி  அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை காணொலிக்காட்சி மூலம் நடைபெறுகிறது.  இதில், 2021-22 ஆம் கல்வியாண்டில் +1 வகுப்பில் மாணவர் சேர்கைக்கு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், 2020 2021 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பான பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியலை அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் பதிவிறக்கம் செய்து, பெயர்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின், திருத்தங்களை உடன் மேற்கொள்ள அறிவுரை வழங்குதல்,


TN Class 11 Admissions: பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடக்கம்


மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் / சுயநிதி பள்ளிகளில் பயிலும் அனைத்து பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு வகுப்பு மாணவர்களின் பெயர்களும் பெயர்பட்டியலில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்தல்" போன்றவை விவாதிக்கப்படுகிறது.   


முன்னதாக, நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தனியார் பள்ளிகள் நடக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். நேற்று, கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.


கரூர் : சுப்ரமணியன் சுவாமி கருத்துக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி