நாளை முதல் தமிழகத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர்களுடன் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையை தொடங்க உள்ள நிலையில், இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பின்வரும் தகவல்களை தெரிவித்தார். 




கரூர் மாவட்டத்தில் பள்ளிகள் எப்படி உள்ளது, வகுப்பறை, நூலகம், ஆய்வுக்கூடம் மற்றும் மாணவர்கள் அமரும் டேபிள் எப்படி உள்ளது. கழிவறைகள் சுகாதாரமாக உள்ளதா? என ஆய்வு செய்து முதல்வரிடம் கொடுக்கப்படும். தனியார் பள்ளிகள் பள்ளிக்கட்டணத்தை கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது என உத்தரவு போடப்பட்டது. இதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து விசாரணை நடத்திய நீதிபதிகள், 75 சதவீதம் கல்வி கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என்றும், அதையும் 30 சதவீதம் ஒரு தவணையாகவும், 45 சதவீதம் ஒரு தவணையாகவும் வசூல் செய்யலாம் என நீதிமன்றம் வழிகாட்டுதல் செய்துள்ளது.




நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தனியார் பள்ளிகள் நடக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையிலுள்ள சேஷாத்ரி பள்ளி மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் ஆட்சியைக் இழக்க நேரிடும் என சுப்ரமணியசாமி கூறிய கருத்திற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், சுப்ரமணிய சாமி கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. மாணவிகள், பொதுமக்கள் அளிக்கப்பட்டுள்ள புகார் விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டு உண்மை என்ற பட்சத்தில் அது யாராக இருந்தாலும், ஆசிரியராக இருந்தாலும், பள்ளி நிர்வாகமாக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக முதல்வர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பார். யாராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்படுவார்.




நீட் தேர்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளனர். அறிக்கை வந்த பின்பு அதன் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார். தமிழகத்தில் பள்ளி திறப்பது தொடர்பாகத்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மாவட்ட மைய நூலகத்தை ஆய்வு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நரிகட்டியூர் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் க.பரமத்தி ஆரம்பப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக கரூர் மாவட்டத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.




குறிப்பாக ஆசிரியர்கள் இரண்டு கட்ட தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தி கொண்டார்களா?  பள்ளி திறப்பதற்கான கட்டமைப்பு எவ்வாறு உள்ளது? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் தமிழகத்தில் முழு தளர்வுகள் அளித்த பிறகு பள்ளி திறப்பது குறித்து முதல்வர் முடிவு  எடுப்பார். என்று கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.