முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைக் திட்டத்திற்கான தகுதித் தேர்வுக்கு அக்.20 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள மாணாக்கர்களுக்கிடையே ஆராய்ச்சி திறனை வளர்க்கவும் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்திற்கான தகுதித் தேர்வு 2023 - 2024 ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பிற்காக நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டை சார்ந்த தகுதியான மாணாக்கர்களிடமிருந்து 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக 20.10.2023 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 15.11.2023 பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
முதுகலை முடித்து, முழுநேர முனைவர் படிப்பில் அரசுக் கல்லூரிகளில் சேரும் யாரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் கலை, மானுடவியல், சமூக அறிவியல் பாடப் பிரிவுகளில் இருந்து 60 பேரும் அறிவியல் பாடப் பிரிவில் இருந்து 60 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம்
முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைக் திட்டத்திற்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம், பதிவுக் கட்டணம் என எதுவும் வசூலிக்கப்படாது.
டிசம்பர் 10ஆம் தேதி அன்று முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைக் திட்டத்திற்கான தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.
கலை, மனித வளம், சமூக அறிவியல் பிரிவின் கீழ் (Arts, Humanities & Social Science Stream) யார் யார்?
தமிழ், ஆங்கில இலக்கியம் - 10 பேர், வரலாறு, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை (Public Administration), புவியியல் - 10 பேர், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் - 10 பேர், வர்த்தகம், மேலாண்மை கல்வி, சமூகப் பணி - 10 பேர், பொருளாதாரம் - 10 பேர், ஊடகவியல், பத்திரிகை மற்றும் மாஸ் கம்யூனிகேஷன், இசை, ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன், நூலகம் மற்றும் தகவல் அறிவியல், உடற்கல்வி, உளவியல் - 10 பேர் என இடம் ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் மொத்தம் 60 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் பிரிவில் (Science Stream)
கணிதம் / புள்ளியியல் - 10 பேர், இயற்பியல் / எலக்ட்ரானிக்ஸ் - 10 பேர், வேதியியல் / உயிர் வேதியியல் - 10 பேர், தாவரவியல், விலங்கியல், உயிரியல், உயிர் தொழில்நுட்பவியல் - 10 பேர், கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பவியல் - 10 பேர், சுற்றுச்சூழல் அறிவியல்/ புவி அறிவியல் / ஹோம் சயின்ஸ் - 10 பேர் என 60 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 100 ஆகும். மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் தேர்வு நடைபெறும். இதில் இரண்டு பகுதிகள் இடம்பெறும். முதல் பகுதியில் கொள்குறி வகையில் 40 மதிப்பெண்களுக்கு 40 கேள்விகள் கேட்கப்படும். நெகடிவ் மதிப்பெண்களும் உண்டு. இரண்டாவது பகுதியில் 2 மணி நேரத்துக்கு 60 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும்.
முழுமையான விவரங்களை அறிய https://www.trb.tn.gov.in/admin/pdf/6870192337CMRF%20%20Final%20Notification%20Dt.13.10.2023..pdf
என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது அவசியம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.trb.tn.gov.in