தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகன் சுப்பிரமணி. வயது 27.  கட்டிட தொழில் செய்து வரும் இவர் தனது தாயுடன் தனியாக வசித்து வருகிறார். தென்காசி அருகே செங்கோட்டை பகுதியில் உள்ளது குண்டாறு நீர்த்தேக்கம். இங்கு தனது நண்பர்களுடன் சுப்பிரமணி நேற்று குளிக்க சென்றுள்ளார். அப்போது 36 அடி ஆழம் கொண்ட நீர்த்தேக்க பகுதியில் சுப்பிரமணி குளித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து நீர்த்தேக்க பகுதியில் வடபக்க கரையில் இருந்து தென்பக்க கரைக்கு நீச்சல் அடித்து சென்றுள்ளார். அப்போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார். உடன் வந்த நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


தொடர்ந்து தகவல் அறிந்து விரைந்து வந்த செங்கோட்டை காவல்துறை சுப்பிரமணியின் உடலை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேற்று விடுமுறை நாள் என்பதால் சுப்பிரமணி தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு குளிக்க சென்றுள்ளார். மது போதையில் நீரில் நீச்சல் அடித்து குளிக்கும் பொழுது மூச்சு திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் குண்டாறு அணையில் ஆழமான நீர்த்தேக்க பகுதியில் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி குளிப்பதனால் இதே போல் தொடர் அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன. இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளிக்க சென்ற வாலிபர் நீரில்  மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண