TN birth Rate: தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகித சரிவை சமாளிப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.


குழந்தை பிறப்பு விகிதம் சரிவு:


உலகம் முழுவதும் குழந்தை பிறப்பு விகிதம் என்பது கடந்த சில தசாப்தங்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு, மிகவும் வேகமாக குறந்து வருகிறது. இதுதொடர்பாக சர்வதேச தலைவர்கள் பலரும் வேதன தெரிவித்து வருகின்றனர். இதற்கு இந்தியாவும், அதில் உள்ள தமிழ்நாடு மாநிலமும் விதிவிலக்கல்ல. தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து குழந்தை பிறப்பு விகிதம் குறைந்ததுள்ளதாக ஐ.நா. சபை ஆய்வில் தெரியவந்துள்ளது.



தமிழ்நாட்டில் 11% குறைந்த மக்கள் தொகை வளர்ச்சி:


ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, தமிழகத்தில் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும். இது தேசிய சராசரியை விட மிக குறைந்த அளவாக இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் தமிழகத்தில் 9 லட்சத்து 45 ஆயிரத்து 701 குழந்தைகள் பிறந்துள்ளனர். அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 2024ம் ஆண்டு 8 லட்சத்து 41 ஆயிரத்து 821 குழந்தைகளாக பதிவாகியுள்ளன. 2024 ஆண்டை 2023 ஆண்டுடன் ஒப்பிட்டால் 60 ஆயிரத்து 485 குழந்தை பிறப்புகள் குறைந்துள்ளது. அதவாது கடந்த ஆறு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் 11 சதவிகிதம் சரிந்துள்ளது. பிறப்பு விகிதம் சரிவை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. இது எதிர்கால தலைமுறையை மட்டுமின்றி, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.


ஸ்ரீதர் வேம்பு ட்வீட்:


குழந்தை பிறப்பு விகித்தை சீர்படுத்த வல்லுநர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும், ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குழந்தை பிறப்பு விகிதம் தொடர்பான செய்தியை இணைத்து, அதற்கான காரணங்கள், ஆலோசனைகளை பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






குழந்தை பிறப்பு சரிய காரணங்கள்: 


செய்திதாளில் உள்ள புள்ளி விவரங்களை குறிப்பிட்டு ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் பிறப்பு எண்ணிக்கையில் ஒட்டுமொத்தமாக 11% சரிவு. மேலும் அது வேகமடைகிறது. தமிழகத்தில் இப்போது பல மாவட்டங்களில் இறப்புகள் பிறப்புகளை விட அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் இப்போது மாற்று நிலைக்கு (Replacement) மிகவும் கீழே உள்ளது மற்றும் கிழக்கு ஆசிய அளவிற்கு  வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதற்கான காரணங்கள் என்ன? மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு மிகவும் நகரமயமாக உள்ளது, அதுவும் ஒரு காரணம்.


ஆனால் கிராமப்புறங்களில் கூட பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்து வருகிறது. மதுவாலும், கடன் வாங்குவதாலும் உந்தப்பட்ட கிராமப்புற சமுதாயத்தின் துயரத்தை நான் நேரடியாகப் பார்க்கிறேன். மேலும் அதிகமான ஆண்கள், குறிப்பாக இளைஞர்கள், சமூகத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் பெண்கள் குடும்பச் சுமையை சுமக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு குறைந்த பிறப்பு விகிதம் சரிவும் ஒரு காரணம் என்று நான் நம்புகிறேன். நமது சமூகத்தில் நம்பிக்கையை புதுப்பிக்க, மதுபானம் மற்றும் கடன் வாங்குதல் ஆகியவற்றை நாம் தீர்க்க வேண்டும். இது ஒரு சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் மற்றும் ஆன்மீக பிரச்சனை” என ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.


மதுவின் தாக்கம்:


தமிழ்நாட்டில் நிகழும் பெரும்பாலான குற்றங்கள் மற்றும் விபத்துகளுக்கு மது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் குழந்தை பிறப்பு விகிதம் சரிவதிலும் மது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் பருவம் முதலே மதுவுக்கு அடிமையாவதால், ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பல விபத்துகளால், பல இளம் விதவைகள் உருவாகின்றனர். மதுபோதைக்கு அடிமையான கணவனால் அவதிப்படும் பல பெண்கள், குழந்தைகளே வேண்டாம் என முடிவெடுக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். தமிழ்நாட்டில் அரசே எடுத்து நடத்தும் டாஸ்மாக் எனப்படும் மதுபானக் கடைகளை மூட வேண்டும் எனபதே, தமிழக தாய்மார்களின் நீண்ட கால கோரிக்கை. ஆனால், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது போல, அந்த கோரிக்கைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.


அதேநேரம், மதுபழக்கம் மட்டுமே குழந்தை பிறப்பு விகிதம் சரிய காரணம் என முற்றிலுமாக கூறி விட முடியாது. காரணம், தமிழ்நாட்டை விட போதைப்பழக்க்கம் நிரம்பி வழியும் பல வடமாநிலங்களில் இன்றும் மக்கள் தொகை வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன.அதன்படி, குழந்தை பிறப்பு விகிதம் சரிய மதுவை தாண்டி பல்வேறு மருத்துவ காரணங்களும் இருக்கின்றன. ஆனால், மது ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்பது நிசர்சனம்.


பொருளாதார நிலைமை


அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினமும், குழந்தை பிறப்பு விகிதம் சரிய மற்றொரு காரணியாகும். கணவன் மற்றும் மனைவி அடங்கிய குடும்பத்திற்கான செலவுகளையே சமாளிக்க முடியாமல் தான், பலர் கடன் சுமையில் தவிக்கின்றனர். இந்த சூழலில் குழந்தையா? என சிந்தித்தே குழந்தையே வேண்டாம் என பலர் முடிவு எடுக்க தொடங்கியுள்ளனர். எனவே, தனி மனித பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதும் அரசின் முன்பு உள்ள முக்கிய சவாலாகும். அப்படி நடந்தால் மட்டுமே பொதுமக்கள் கடன் சுமையில் இருந்து விடுபட்டு, குழந்தை பெறுவது குறித்து சிந்திக்க தொடங்குவர்.