இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் வேம்பு இன்றியமையாதது. வேப்பம் மரம், பூ, காய், பட்டை ஆகியவற்றின் பண்புகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் அதன் பயன்பாடு பற்றி நாம் அறிந்திருப்போம். இன்று மருத்துவம் முதல் அழகு சார்ந்த துறை வரை வேப்ப மரத்தின் பாகங்கள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், வேப்ப மரப்பட்டைகள் கொரோனா பாதித்தவர்களுக்கு குணப்படுத்துவதில் உதவுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.


கொலராடோ பல்கலைக்கழகம் அன்சுட்ஸ் மருத்துவ நிறுவனம் மற்றும் கொல்கத்தா இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, விஞ்ஞானிகள் தலைமையில் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் வேப்ப மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்பட்ட சாறு, கொரோனா வைரஸின் பரவலைக் குணப்படுத்தவும், தொற்று பரவலைக் குறைக்கவும் உதவுகிறது என்று தெரிவித்துள்ளனர். 'வைராலஜி' என்ற இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.


வேப்ப மரப்பட்டையில் உள்ள மருத்துவ குணங்கள், பரவலான வைரஸ் புரதங்களை அழிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸ்களின் (SARS-CoV-2) உள்பட புதிதாக உருமாறும் வைரஸிற்கு எதிராக  சிறப்பாக செயல்படும் திறனை கொண்டுள்ளது.


இந்தியாவில் ஆயூர்வேதம், சித்த மருத்துவத்தில் வேப்ப இலை மரம், பட்டை, ஆகியவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிவைரல் பண்புகளுக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மரப்பபட்டை சாறு மலேரியா, வயிறு பிரச்சனைகள் மற்றும் குடல் புண்கள், தோல் நோய்கள் போன்ற பல்வேறு பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேம்புவின் மகத்துவத்தை அனைவரும் அறிந்திருக்கிறார்கள்.


இந்த ஆராய்ச்சியின் குறிக்கோள், கொரோனா வைரஸால் யாராவது பாதிக்கப்படும்போது கடுமையான நோய் அபாயத்தைக் குறைக்கும் வேம்பு பொருட்கள் அடிப்படையிலான மருந்தை உருவாக்குவதே என நரம்பியல் மற்றும் கண் மருத்துவ துறையின் ஆராய்ச்சியாளர், பேராசிரியர், மரியா நாகல் கூறியுள்ளார்.


 எங்கள் ஆராய்ச்சியின் அடுத்த கட்டம், வேப்ப மரப்பட்டை சாற்றில் உள்ள குறிப்பிட்ட கூறுகளை கண்டறிவதாகும். ஏனெனில் இந்த கூறுகள் SARS இன் பல்வேறு பகுதிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடையும்போது வேப்ப மரப்பட்டையை எப்படி பயனப்படுத்துவது என்பதற்கு இது உதவும்.  புதிய கொரோனா வைரஸ் பரவலுக்கு இது நிச்சயம் உதவும் என்றும், தற்போதை நிலையில், தொடர்ந்து உருமாறிவரும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பு மருந்தாகவும் இது இருக்கும் என்பதற்கான அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளுக்கு இந்த ஆய்வு வழிகாட்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வுகள் இன்னும் மேம்படுத்தப்பட்டால், கொரோனா வைரஸ் பரவைக் கட்டுப்படுத்த வேப்ப மரப்பட்டைகள் உதவலாம்.