12th Supplementary Exam 2023: ஜூன் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 துணைத்‌ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (மே 17) கடைசித் தேதி என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது.


யாரெல்லாம் துணைத் தேர்வை எழுதலாம்?


கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்‌ தேர்வு‌ எழுதி தோல்வியடைந்த  மாணவர்களும் தேர்வுக்கே செல்லாத மாணவர்களும்‌ துணைத் தேர்வை எழுதலாம். அதேபோல தகுதியுள்ள தனித்தேர்வர்களும்‌, இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பித்து, தேர்வை எழுதலாம்.


பள்ளி மாணவர்கள்விண்ணப்பிப்பது எப்படி?


மாணவர்கள்‌, தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும்‌ எழுத அவர்கள்‌ பயின்ற பள்ளிக்கு நேரில்சென்று விண்ணப்பிக்க வேண்டும். நாளை மறுநாள் 17.05.2023 (புதன்கிழமை ) வரை காலை 11 மணி முதல்‌ மாலை 5 மணிக்குள்‌  விண்ணப்பிக்க வேண்டும்‌.


தனித்தேர்வர்கள்விண்ணப்பிப்பது எப்படி?


தகுதியுள்ள தனித்தேர்வர்களும்‌ ஏற்கெனவே பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும்‌ துணைத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். இவர்களும் நாளை மறுநாள் 17.05.2023 ( புதன்கிழமை) வரை காலை 11 மணி முதல்‌ மாலை 5 மணிக்குள்‌ கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்‌.


இவர்கள் தவிர்த்து, கடந்த ஆண்டுகளில்‌ பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள்‌ அனைவரும்‌, தற்போது, தேர்வில்‌ தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும்‌ எழுத‌ விண்ணப்பிக்கலாம்‌.


அரசுத்தேர்வுகள் சேவை மையங்கள் (Government Examinations Service Centres)


கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின்‌ (Government Examinations Service Centres) விவரங்கள்‌ மற்றும்‌ ஆன்லைனில்‌ விண்ணப்பங்கள்‌ பதிவு செய்தல்‌ குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும்‌ அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள்‌ அறிந்துகொள்ளலாம்‌. மேலும்‌, அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகங்கள்‌, அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகங்கள்‌ மற்றும்‌ அனைத்து அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகங்கள்‌ வாயிலாகவும்‌ அறிந்து கொள்ளலாம்‌.


தேர்வுக்‌ கட்டணம்‌ மற்றும்‌ ஆன்‌லைன்‌ பதிவுக்‌ கட்டணத்தினை சேவை மையத்தில்‌ / பள்ளியில்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.



சிறப்பு அனுமதித்திட்டம்


மே 17 (புதன்கிழமை) வரையிலான நாட்களில்‌ துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கத்‌ தவறும்‌ தேர்வர்கள், சிறப்பு அனுமதித்‌ திட்டத்தில்‌ உரிய கட்டணத்‌ தொகையுடன்‌ 18.05.2023 (வியாழக்கிழமை) முதல்‌ 20.05.2023 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில்‌ ஆன்‌லைனில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.


சிறப்பு அனுமதிக்‌ கட்டணம்‌ -. ரூ.1000


ஹால் டிக்கெட் எப்போது?


ஆன்‌லைனில்‌ விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகைச்‌ சீட்டு வழங்கப்படும்‌. அதில்‌ குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி, அரசுத்‌ தேர்வுத்‌ துறை பின்னர்‌ அறிவிக்கும்‌ நாளில்‌ தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுகளை பதிவிறக்கம்‌ செய்ய வேண்டும். இதனால்‌, ஒப்புகைச்‌ சீட்டினை தனித்தேர்வர்கள்‌ பாதுகாப்பாக வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


கூடுதல் விவரங்களுக்கு: https://tnegadge.s3.amazonaws.com/notification/Press/1683712689.pdf