அண்மைக் காலங்களில் முதல்முறையாக மாணவர் ஒருவர் 600-க்கு 599 மதிப்பெண்களைப் பெற்று, மாநில அளவில் இடம் பிடித்தது பேசு பொருளாகி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் என்ற மாணவர் இந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று (மே 8) வெளியான நிலையில், ஒட்டுமொத்த மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மாணவ- மாணவிகள் 95.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அறிவியல் பாடப் பிரிவுகளில் தேர்ச்சி விகிதமும் சதங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது. அதே நேரத்தில் வணிகவியல் பாடப் பிரிவுகளில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதேபோல மாவட்ட அளவில் அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த பாரதிய வித்யா பவன் பள்ளி மாணவி ஓவியாஞ்சலி, 600-க்கு 599 மதிப்பெண்களைப் பெற்று உள்ளார்.
சாதனை படைத்த மாணவன் ராகுல்
அதேபோல, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் என்ற மாணவரும் 599 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். பல்லடத்தைச் சேர்ந்த இவர், வணிகப் பாடப் பிரிவு மாணவர் ஆவர்,
ராகுல், ஃப்ரெஞ்சு பாடத்தில் 100-க்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களையும் பொருளாதாரம் மற்றும் வணிகவியலில் தலா 100 மதிப்பெண்களையும் வாங்கியுள்ளார். அதேபோல, கணினி பயன்பாடுகள் பாடப் பிரிவில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தி உள்ளார்.
அடுத்தடுத்த இடங்களில் யார் யார்?
இதுபோக, திருப்பூரைச் சேர்ந்த எஸ். ருத்ரமூர்த்தி எனும் அறிவியல் பாடப்பிரிவு மாணவர் 598 மதிப்பெண்களை குவித்துள்ளார். தொடர்ந்து, சென்னையை சேர்ந்த ஆர். லட்சுமிகாந்த் என்னும் அறிவியல் பாடப்பிரிவு மாணவர் 597 மதிப்பெண்களை எடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாஸ்மின் (அறிவியல் பாடப்பிரிவு) என்பவரும் தர்மபுரியை சேர்ந்த ரக்ஷனா (வணிக பாடப்பிரிவு) 597 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.