கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது குழந்தைகள் உடன் மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் ஏற்காடு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் சிரமமின்றி ஏற்காட்டில் சுற்றிப் பார்ப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் மண்டலம் சார்பில் கோடை விழாவை முன்னிட்டு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை கண்டு மகிழ்ந்திடும் வகையில் உள்வட்ட சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இச்சிறப்பு பேருந்து கோடை காலம் முடியும் வரை காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேக்கேஜ் பேருந்து புறப்படும். ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம் ஆகிய 11 இடங்களை கண்டு கழித்து மீண்டும் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாலை 7.00 மணிக்கு பேக்கேஜ் நிறைவு செய்யும் வகையில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சிறப்பு பேருந்துக்கு ஒரு பயணிக்கு ரூ.300 கட்டணமாகவும், 1/2 கட்டணம் ரூ.150/- ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளின் வசதிக்காக பேக்கேஜ் பயணத்திற்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையத்தளம் www.tnstc.in மற்றும் App (tnstc bus ticket booking app) வழியாகவும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் இவ்வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனவே ஏற்காடு சிறப்பு பேருந்தை பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்திடும்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் தங்களது உறவினர்களுடன் ஏற்காடு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தோம். ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்ப்பதற்கு வாகனம் வாடகைக்கு எடுக்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது ஏற்காடு கோடை சிறப்பு பேருந்து அறிமுகப்படுத்தி உள்ளது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஏற்காடு சென்று அங்கு 11 சுற்றுலா தலங்களை 300 ரூபாயில் சுற்றிப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தினம்தோறும் ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதாக கூறினார். இதனை இன்னும் அதிகரிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.