தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள்வெளியிடப்பட்டன. முன்பு அனைத்து தேர்வு முடிவுகளும் முதன்மை கல்வி அலுவலகம் மூலம், பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக்கூடங்களில் இணைக்கப்பட்டு உள்ள மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து மாணவர்களுக்கும், செல்போன் மூலம் மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை மாணவர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். அதே போன்று தனது நண்பர்களையும் தொடர்பு கொண்டு மதிப்பெண்களை பரிமாறிக் கொண்டனர்.




தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 8 ஆயிரத்து 155 மாணவர்கள், 10 ஆயிரத்து 423 மாணவிகள் ஆக மொத்தம் 18 ஆயிரத்து 578 பேர் எழுதினர். இதில் 7 ஆயிரத்து 681 மாணவர்கள், 10 ஆயிரத்து 227 மாணவிகள் ஆக மொத்தம் 17 ஆயிரத்து 908 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 96.39 சதவீதம் ஆகும். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சியில் 7-வது இடத்தை பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 5-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 782 பேர் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 423 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 96.95 சதவீதம் தேர்ச்சி ஆகும். கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 796 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில், 6 ஆயிரத்து 485 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 95.42 சதவீதம் ஆகும். மேலும் காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஏரல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆறுமுகநேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ராமானுஜம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர் ஏ.எஸ்.ஏ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உமரிக்காடு அசு மேல்நிலைப்பள்ளி, கொம்பங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, செங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 13 அரசு பள்ளிக்கூடங்களில் படித்த அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சியை எட்டி சாதனை படைத்து உள்ளனர்.




தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் 89.31 சதவீதம் பேரும், மாணவிகள் 96.90 சதவீதம் பேரும், ஆக மொத்தம் 94.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். 13 அரசு பள்ளிக்கூடங்கள் உள்பட மொத்தம் 74 பள்ளிக்கூடங்களில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன.