12 -ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு


மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12 -ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். தொடர்ந்து மார்ச் 23 -ம் தேதி முதல் மாணவர்களின் விடைத் தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.


அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத் தாள்கள் மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் பணி ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 13-ஆம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற்றன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த பிறகு, மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றன. 




தேர்வு முடிவுகள்


12 -ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள், மே 6 -ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியாகின. குறிப்பாக சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.38 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட முழுவதும் மாணவர்கள் 4 ஆயிரத்து 289 பேரும், மாணவிகள் 5 ஆயிரத்து 355 பேரும்  என மொத்தம் 9 ஆயிரத்து 644 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.


இதில் 3 ஆயிரத்து 872 மாணவர்களும், 5 ஆயிரத்து 37 மாணவிகளும் என 8 ஆயிரத்து 909 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 90.28 சதவீதமும், மாணவிகள் 94.06 சதவீதம் என வழக்கம்போல் பெண் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மாநில அளவில் 29 இடம் பெற்றுள்ளது.




தேர்ச்சி பெற்ற நரிக்குறவர் இன மாணவர் 


மயிலாடுதுறையை அடுத்துள்ள பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவர் சமுதாயத்தினர் 100 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  நரிக்குறவ மாணவர்கள் அப்பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். 100 - க்கும் மேற்பட்ட மாணவர்கள் 1 முதல் 8 -ஆம் வகுப்புவரை தங்கி படித்துவருகின்றனர். பள்ளி நிர்வாக Need தொண்டு நிறுவனம் பராமரிப்பின் தொடாந்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.




இந்நிலையில் இப்பள்ளி எட்டாம் வகுப்பு வரை படித்து தற்போது  மயிலாடுதுறை உள்ள தருமபுரம் குரு ஞானசம்பந்தர் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் +2  படித்து வந்த நரிக்குறவர் இன மாணவர் வீரசிவாஜி என்ற மாணவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 303 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவர் வீரசிவாஜியை உண்டு உறைவிடப்பள்ளி மையத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர். மேலும் எங்கள் இன மக்கள் இதுபோன்று படித்து உயர வேண்டும், மேலும் தான் படித்து ஒரு சிறந்த வழக்கறிஞராக வர உள்ளதாக மாணவர் நம்பிக்கை தெரிவித்தார்.