சரிந்த தேர்வு முடிவுகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5680 மாணவர்களும், 6733 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 12,413 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். இதில் மாணவர்கள் 5060 நபர்களும், மாணவிகள் 6395 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்ச்சி சதவீதம் 92.28 உள்ளது. 2021 இரண்டாம் ஆண்டு காஞ்சிபுரம் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 27-வது இடத்தை பிடித்திருந்தது. கடந்த ஆண்டு சரிந்து 31 வது இடத்தை பிடித்திருந்தது. ஆனால் இம்முறை மீண்டும் சரிந்து 35 வது இடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து இருப்பது மட்டுமே காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆறுதலான விடயமாக பார்க்கப்படுகிறது.
மானத்தைக் காப்பாற்றிய ஒரே பள்ளி !
கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் சார்பில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற ஒரே பள்ளியாக பரந்தூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி திகழ்ந்தது. அதேபோன்று இந்த ஆண்டு பரந்தூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சியை பெற்று அசத்தியுள்ளது. சமீப காலமாக பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அருகே உள்ள கிராமங்களான ஏகனாபுரம் கிராமத்தில் 650 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒருபுறம் அரசு பள்ளி செயல்பட்டு வரும், பகுதி அருகே போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இரண்டாவது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சியை பெற்று பரந்தூர் மேல்நிலைப்பள்ளி சாதித்துள்ளது. தேர்வு எழுதிய 91 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் கடந்தாண்டு இதே பள்ளியில் தேர்வு எழுதி 81 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது
மக்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்ப்பு
முறையாக கண்காணிப்பதில்லை என்பதே மிகப்பெரிய குற்றச்சாற்றாக பெற்றோர்கள் மத்தியில் இருக்கிறது. குறிப்பாக மாவட்ட கல்வி அலுவலர்கள் அரசு பள்ளிகளுக்கு முறையாக ஆய்வு மேற்கொள்வது கிடையாது என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து இருந்து வருகிறது. பிற மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி 90 சதவீதம் அதற்கு மேல் இருக்கும் நிலையில், காஞ்சிபுரத்தில் 90 சதவீதத்திற்கும் கீழ் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற நாட்களில் இதிலிருந்து பாடம் கற்பித்து தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.