Trichy pass Percentage, TN 12th Result 2023: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. குறிப்பாக மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு, ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவர்கள் எழுதினர். ஏப்ரல் 11ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் பணியை முதுகலை ஆசிரியர்கள் தொடங்கினர். விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்ற நிலையில், விடைத் தாள்கள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டன.  விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டு முதலில் மே 5ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாவதாக இருந்தது. ஆனால் நேற்று ( மே 7)  இளநிலை  மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இதனால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. 


மேலும், அதன்படி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவ, மாணவிகள் www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in,  www.dge.tn.gov.in, www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இந்நிலையில் திருச்சி கல்விமாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சியின் ஒரு பள்ளி உள்பட 89 அரசு பள்ளிகளும், 46 அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசின் பகுதி உதவி பெறும் 28 பள்ளிகளும், 81 தனியார் மெட்ரிக் பள்ளிகளும், 13 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், ஆதிதிராவிட பழங்குடியினருக்கான ஒரு  உண்டு உறைவிடப்பள்ளியும்  என மொத்தம் 260 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இதில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் திருச்சி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 390 மாணவர்களும், 16 ஆயிரத்து 520 மாணவிகளும் என மொத்தம் 30 ஆயிரத்து 910 மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். மேலும் (2020-21) கல்வி ஆண்டில்  கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையும், +2 மாணவர்களுக்கு 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கப்பட்டது. (2019-20) ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 95.94% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த கல்வியாண்டில் (2021-22) திருச்சி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 95.93% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பு கல்வியாண்டில் (2022 - 2023) திருச்சி மாவட்டத்தில் 96.02 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதில் மாணவர்கள் 93.95%, மாணவிகள் 97.81% தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக திருச்சி கல்வி மாவட்டத்தில் 12 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கிழக்கு தொடர்ச்சி மலையில் டாப்செங்காட்டுபட்டியில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடினர் அரசு மேல்நிலைபள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சி புத்தூரில் உள்ள பார்வை மாற்றுதிறணாளிக்கான அரசு மேல்நிலைபள்ளில் தேர்வு எழுதிய 17 மாணவர்களும் முழுமையாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.