தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிதி சார்ந்த பிரச்சினைகளைச் சரிசெய்ய, உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, ஊதியம் வழங்குவதிலேயே சிக்கல் ஏற்பட்டது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அதேபோல சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் நிர்வாக நெருக்கடியால் பேசுபொருளாகி உள்ளது. அதற்கு முன்னால் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரே கைது செய்யப்பட்ட அவலமும் நிகழ்ந்தது. அதேபோல திருச்சி பாரதிதாசன் பல்கலை.யிலும் தற்போது பணப் பற்றாக்குறை ஏற்பட்டது.
காமராஜர் பல்கலைக்கழகத்தில் என்ன பிரச்சினை?
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (Madurai Kamaraj University) ஆசிரியர்களின் ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்காக மாதத்துக்கு சுமார் ரூ.12 கோடி தேவைப்படுகிறது. இது ஆண்டுக்கு சுமார் 145 கோடி ரூபாய் ஆகும். இவை தவிர்த்து பல்கலைக்கழக வளாகத்தை நிர்வகிக்க தனியாக நிதி தேவைப்படுகிறது. ஆனால் தமிழக அரசு 58 கோடி ரூபாயை மட்டுமே கொடுக்கிறது.
இதனால் ஆண்டுதோறும் கூடுதல் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. இந்த சூழலில், பல்கலைக்கழக வைப்பு நிதியில் இருந்து சுமார் ரூ.300 கோடி வரை எடுத்து செலவு செய்யப்பட்டது. வைப்பு நிதி காலியான நிலையில், கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. கூடுதல் நிதி பெறுவதில் தணிக்கைத் துறை மீதான தடை நிலுவையில் உள்ளது. இதனால் பல்கலைக்கழகம் இயங்குவதிலேயே சிக்கல் ஏற்பட்டது.
7 பேர் கொண்ட அரசாணை
பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கவில்லை. குறிப்பாக டிசம்பர், ஜனவரி ஆகிய 2 மாதங்களில் இதுவரை ஊதியம் வழங்கவில்லை. பிப்ரவரி மாத ஊதியத்தை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஊழியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஏபிபி நாடு செய்தி வெளியிட்டது. இந்த நிலையில், நிதி நெருக்கடியை சீர்செய்யும் வகையில், 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்தக் குழுவை உருவாக்கி, அரசாணையை வெளியிட்டு உள்ளது.
அரசாணையில், கணக்குத் தணிக்கைகளின்போது, பல்கலைக்கழகத்தின் பதிவாளர், உயர் மட்டக் குழுவின் கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொண்ட வேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்தக் குழு கூடி, விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாம்: நிதி நெருக்கடி, நிர்வாக மோசடி: தத்தளிக்கும் பல்கலைக்கழகங்கள், தவிக்கும் ஆசிரியர்கள்- விடிவு எப்போது?