தமிழ் சினிமாவை வேறு ஒரு தொலைநோக்கு பார்வையுடன் அணுகும் வெகு சில இயக்குநர்களில் ஒருவர் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக விளங்கும் பார்த்திபன். அவரின் படைப்புகள் மூலம் புதிய பல முயற்சிகளை எடுத்து அனைவரையும் திகைக்க வைக்க கூடுயவர். அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் வழக்கமான தன்னுடைய சுவாரஸ்யமான உரையாடலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பற்றி பேசி இருந்தார். 


 



"தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர்களான கமல்ஹாசன் ரஜினிகாந்த் இருவருடன் நட்பு ரீதியாக நல்ல ஒரு பிணைப்பு இருக்கிறது. கமல் சார் எனக்கு எப்படி என்றால் அவருக்கு சிவாஜி கணேசன் எப்படியோ அப்படி. சிவாஜி சாரை எப்படி அவர் ஆதர்ஷ குருவாக எடுத்துக்கொண்டாரோ அதே போல தான் கமல் சார் மீது எனக்கு இருக்கும் நேரடியான பார்வை. எனக்கு மட்டுமல்ல ரஜினி சாருக்கு கூட கமல் சார் தான் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் மேடையில் ஒருமுறை பேசும் போது கமல் இருக்கும் இந்த திரையுலகில் என்னை மாதிரி ஒருத்தன் சூப்பர்ஸ்டார் ஆவது எவ்வளவு பெரிய விஷயம் என கூறியிருந்தார். அந்த அளவுக்கு  அனைவருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் கமல் சார். 



உண்மையில் சொல்ல போனால் நானும் ரஜினி சாரும் அடிக்கடி பேசிக்கொள்வோம். ஆனால் அது போல நான் கமல் சாருடன் நான் செய்ததே இல்லை. அவரை போலவே நானும் சினிமாவில் பல புதிய முயற்சிகளை செய்வதாலேயே என்னை கொஞ்ச நாள் கருப்பு கமல்ஹாசன் என்றெல்லாம் அழைத்துள்ளார்கள். எனக்கு இரண்டு பேரும் ஒன்று தான். 


குறிப்பாக கமல் சாரின் அரசியல் பார்வை, அவரின் பின்புலம் பற்றி எல்லாம் கவலை இல்லாமல் அதில் அவர் இறங்கி செய்ய வேண்டும் என்ற தைரியமும் துணிச்சலும் மற்றவர்களிடம் பார்ப்பது மிகவும் குறைவு. அதற்காக அவரை நான் பாராட்டுவேன். 


 



அவருடன் அரசியல் பயணத்தில் எதிர்காலத்தில் நான் இணைவேனா என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. அரசியல் மீது எனக்கு ஒரு ஸ்பெஷல் பார்வை இருக்கிறது. என்னுடைய எல்லா படங்களிலும் அரசியல் இருக்கும். நான் ஒரு மனிதநேயம் உள்ளவன் அதனால் என்னால் முடிந்த விஷயங்களை நான் செய்து வருகிறேன். பிற்காலத்தில் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் எல்லாம் நான் இதை செய்யவில்லை. 


சினிமாவுக்கு நான் வருவதற்கு முன்னர் பல நாட்கள் கஷ்டப்பட்டேன். புதிய பாதை படத்திற்கு பிறகு தான் எனக்கு என வீடு, கார் இந்த வசதி வாய்ப்பெல்லாம் வந்தது. இது அனைத்தையும் எனக்கு கொடுத்தது இந்த சமூகம் தான் என்பது என்னுடைய நம்பிக்கை. இந்த சமூகத்துக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறேன். நிச்சயம் சமூகத்தை நோக்கி என்னுடைய பார்வை இருக்கும். அது அரசியலா அல்லது கமல் சாரா என்பது இப்போதைக்கு தெரியாது" என்றார் பார்த்திபன்.