பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அடிக்கடி வெளியில் செல்வது, காலதாமதமாக வருவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 


27.30 லட்சம் மாணவர்கள்


2022- 2023ஆம்‌ கல்வியாண்டிற்கான பத்தாம்‌ வகுப்பு, பொதுத்‌ தேர்வுகள்‌ மார்ச்‌ மற்றும்‌ ஏப்ரல்‌- 2023 மாதங்களில்‌ நடைபெற உள்ளன. மேல்நிலை முதலாம் ஆண்டு, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த பொதுத் தேர்வுகளை‌ மொத்தம் 27.30 இலட்சம்‌ மாணவர்கள்‌ எழுத உள்ளனர்‌.


மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகள்‌ 13.03.2023 அன்று தொடங்கின. இந்தத் தேர்வுகள் 03.04.2023 வரை நடைபெறவுள்ளன. இத்தேர்வினை 7600 பள்ளிகளில்‌ பயிலும்‌ 8.80 இலட்சம்‌ பள்ளி மாணவர்கள்‌ 3169 தேர்வு மையங்களில்‌ எழுதி வருகின்றனர்‌.


மேல்நிலை முதலாம்‌ ஆண்டு  பொதுத்‌ தேர்வுகள்‌ 14.03.2023 அன்று தொடங்கிய நிலையில்,தேர்வு 05.04.2023 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 7600 பள்ளிகளில்‌ பயிலும்‌ 8.50 இலட்சம்‌ பள்ளி மாணவர்கள்‌ 3169 தேர்வு மையங்களில்‌‌ எழுதி வருகின்றனர்‌.


விரைவில் 10ஆம் வகுப்புத் தேர்வு


பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுகள்‌ 06.04.2023 அன்று தொடங்கி 20.04.2023 வரை நடைபெற உள்ளன. இத்தேர்வினை 12,800 பள்ளிகளில்‌ பயிலும்‌ 10 இலட்சம்‌ பள்ளி மாணவர்கள்‌ 3,986 தேர்வு மையங்களில்‌ தேர்வெழுத உள்ளனர்‌.


இந்த நிலையில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அடிக்கடி வெளியில் செல்வது, காலதாமதமாக வருவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்த விரிவான வழிகாட்டுதல்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.




என்னென்ன வழிகாட்டல்கள்?


* உதவித்‌ தேர்வாளரைக்‌ கொண்டு முழுமையாக விடைத் தாள்களை முதிப்பீடு செய்து தரும்‌ முழுப்பொறுப்பும்‌ முதன்மைத்‌ தேர்வாளருக்கே உரியதாகும்‌.


* தமக்கு ஒதுக்கீடு செய்யப்படாத உதவித்‌ தேர்வாளர்‌ தன்னிடமோ அல்லது தம்‌ குழுவிடமோ மதிப்பீட்டுப்‌ பணியின்‌ போது தேவையில்லாமல்‌ வந்து பேசுவது முற்றிலும்‌ தவிர்க்கப்பட வேண்டும்‌. இதனை முதன்மைக்‌ கண்காணிப்பானர்கள்‌ கண்காணிக்க வேண்டும்.


* விடைத்தாள் திருத்தும் அறையில்‌ எக்காரணத்தைக் கொண்டும்‌ செல்போனை பயன்‌படுத்தக் கூடாது. இது கண்டறியப்பட்டால்‌ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்‌.


* குழுவில்‌ பேசிக்கொண்டோ, அலைப்பேசியில்‌ பேசிக்கொண்டோ விடைத்தாட்கள்‌ திருத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்‌.


* அடிக்கடி வெளியில்‌ சென்று வருவது, காலதாமதமாக வருவது தவிர்க்கப்பட வேண்டும்‌. 


* உணவு உண்பதற்காக முகாமை விட்டு வீட்டிற்கு சென்று அல்லது ஓட்டலுக்கு சென்று வருவது சிறந்த நடத்தையல்ல என்பதை தெரிவிக்க வேண்டும்‌. பணியின்‌போது முகாமை விட்டு வெளியில்‌ செல்லக்‌ கூடாது. இதனை முகாம்‌ அலுவலர் கண்காணிக்க வேண்டும்‌.


என்பன உள்ளிட்ட பல விதிமுறைகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 


இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.