மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி பெண் ஆடை வடிவமைப்பாளரிடம் பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் ஜெமினி கணேசனின் பேரனின் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். 


ஜெமினி கணேசன் பேரன் மனைவி:


சென்னை தியாகராய நகர் ஆர்காட் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மஞ்சு என்பவர் வசித்து வருகிறார். ஆடை வடிவமைப்பாளரான இவர், சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளர்களுக்கான ஆடைகளை வடிவமைத்து கொடுக்கும் பணியை செய்து வருகிறார். அதேசமயம் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அவரை பிரிந்த மஞ்சு இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.


ஆடை வடிவமைப்பாளரான மஞ்சுவின் வாடிக்கையாளர்களில் ஒருவர் அபர்ணா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் மனைவி ஆவர். அபர்ணா ஆடை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு ஆடைகளை வடிவமைத்து மஞ்சு கொடுப்பதால் இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெமினி கணேசன் குடும்பம் என்பதால் மிகுந்த மரியாதையோடு அபர்ணாவிடம் மஞ்சு பழகி வந்துள்ளார். 


மருத்துவக்கல்லூரி சீட்:


இதனிடையே கடந்தாண்டு மஞ்சுவின் மகள் லாவண்யா ஸ்ரீ 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் லாவண்யா ஸ்ரீக்கு தான் விரும்பியக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. இதனை மஞ்சு மூலமாக தெரிந்துக் கொண்ட அபர்ணா, தனக்கு சென்னை போரூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனக்கு தெரிந்த நபர் இருப்பதாகவும், ரூ.20 லட்சம் கொடுத்தால் மருத்துவ சீட் வாங்கி விடலாம் என  தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ரூ.5 லட்சம் கொடுத்தால் முன்பதிவு செய்து விடலாம் எனவும் அபர்ணா மஞ்சுவிடம் தெரிவித்துள்ளார். 


மீதி பணத்தை சீட் வாங்கிய பிறகு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்க அதனை நம்பிய மஞ்சுவும் அபர்ணாவின் நண்பர் அஜய் வங்கிக்கணக்கில் 5 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். உடனே மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கியது போன்று ஒரு கடிதத்தை மஞ்சுவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து மஞ்சு அந்த கடிதத்துடன் சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிக்கு மகளை சேர்க்க சென்றுள்ளார். அங்கு அவரின் கடிதத்தை ஆய்வு செய்த கல்லூரி நிர்வாகம் இது போலியானது என தெரிவித்துள்ளனர்.


தலைமறைவு


இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சு அபர்ணாவிடம் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அலைக்கழித்து வந்த அபர்ணா, ஒரு கட்டத்தில் மஞ்சு எந்த நண்பரின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பினாரோ அவரிடம் சென்று பணத்தை வாங்கிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து மஞ்சு பணம் கேட்டு வரவே, தனது ஆடை கடையை மூடிவிட்டு அபர்ணா தலைமறைவானார். இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த மஞ்சு மாம்பலம் காவல் நிலையத்தில் அபர்ணா மீது புகாரளித்தார். அதனடிப்படையில் 6 பிரிவுகள் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபர்ணா மற்றும் அஜய்யை தேடி வருகின்றனர்.