தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியத்தில் பொதுத் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு, வரிசையாகப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி வருகின்றன.


12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவ – மாணவிகள் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள், 96.44 சதவீதம் பேரும் மாணவர்கள் 92.37 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.03 சதவீதமாக இருந்த நிலையில், இந்த முறை தேர்ச்சி விகிதம் அதிகரித்தது.


7532 பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், அதில் 100% தேர்ச்சி அடைந்த பள்ளிகளாக 2400 பள்ளிகள் இருக்கின்றன. 26352 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றனர். 125 சிறைவாசிகள் தேர்வெழுதியதில் 112 பேர் தேர்ச்சி அடைந்தனர்.


அதேநேரம், பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளபடி, 51,919 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அதில் 32,164 ஆண்களும் 19,755 பெண்களும் உள்ளனர். தொடர்ந்து 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியாகின.  அந்த தேர்வை எழுதியவர்களில் 3,96,152 மாணவர்களும், 4,22,591 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் 75,521 பேர் தோல்வியடைந்தனர். இதைத் தொடர்ந்து 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 14) காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளன.


தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?


11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 14) காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில், தேர்வுகள் இயக்குநரால் வெளியிடப்பட உள்ளன. 


இந்தத்  தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in  ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


இணையதளம் தவிர்த்து,



  • மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

  • மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசியத் தகவலியல் மையங்களில் (National Informatics Centres) 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறியலாம்.

  • அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

  • மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.