கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற மேல்நிலை முதலாம்‌ ஆண்டு, இரண்டாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்வுகளின் மறுகூட்டல்‌ / மறுமதிப்பீடு முடிவுகள்‌ நாளை (செப்டம்பர் 4) வெளியாக உள்ளன.


மேல்நிலை முதலாம்‌ ஆண்டு, இரண்டாம்‌ ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் துணைத் தேர்வுகள்‌ நடைபெற்று முடிந்தன. இதை எழுதி, மறுகூட்டல் (Retotal) மற்றும்‌ மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள்‌, மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தனித் தேர்வர்களின் பதிவண்களின்‌ பட்டியல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ Notification பகுதியில்‌ 04.09.2023 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல்‌ வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில்‌ இடம்‌ பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில்‌ எவ்வித மதிப்பெண்‌ மாற்றமும்‌ இல்லை எனத்‌ தெரிவிக்கப்படுகிறது.


மறுகூட்டல்‌ / மறுமதிப்பீட்டில்‌ மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தனித்தேர்வர்கள்‌ மட்டும்‌, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில்‌ தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள்‌ அடங்கிய மதிப்பெண்‌ பட்டியலை (Statement‌ of Marks) பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


மேலும்‌, மேல்நிலை துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்‌ வழங்கப்படும்‌ தேதி குறித்து பின்னர்‌ அறிவிக்கப்படும்‌ எனத்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.


மாணவர்கள் https://apply1.tndge.org/dge-notification/HRSEC என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 


துணைத் தேர்வு பின்னணி


தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இருந்து வரும் நிலையில், இதில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில்  சுமார் 8 லட்சத்து 03ஆயிரத்து 385 மாணவ-மாணவிகள் எழுதினர்.  விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.


50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் 79 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் பங்கேற்று விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். 


இதையடுத்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் மே 8ஆம் தேதி காலை 10.05 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 


8.3 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய 12 ஆம் வகுப்பு தேர்வில் 47,934 மாணவ, மாணவியர்கள் தோல்வியடைந்தனர். இவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் 19ஆம் தேதி முதல் தொடங்கி, ஜூன் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் 27ஆம் தேதி தொடங்கி, ஜூலை 5ஆம்தேதி வரை நடைபெற்றது. 


இந்த நிலையில் மேல்நிலை முதலாம்‌ ஆண்டு, இரண்டாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்வுகளின் மறுகூட்டல்‌ / மறுமதிப்பீடு முடிவுகள்‌ நாளை (செப்டம்பர் 4) வெளியாக உள்ளன.