10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு


தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடந்து முடிந்தன. முன்னதாக பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது. 10 ஆம் வகுப்புக்கான தேர்வை தமிழ்நாட்டில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 061 மாணவிகளும், 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்களும், என மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர்கள் தேர்வு எழுதினர். இதனை தொடர்ந்து ஏப்ரல் 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக திருத்தும் பணிகள் முடிந்து மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து முடிந்தது. இதனையடுத்து திட்டமிட்டபடி, இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாணவியர் (94.53%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் (88.58%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 5.95% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர், தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு மாணவ, மாணவிகள் ஏற்கனவே தேர்வுத்துறைக்கு தெரிவித்திருந்த செல்போன் எண்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கபட்டது. இதுதவிர, அரசுத் தேர்வு இயக்ககத்தின் இணைய தளங்களான www.results.nic.in, www.dge.tn.gov.in ஆகியவற்றின் மூலமும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இத்துடன் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பொது நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

  




திருச்சி மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் 5 வது இடம் பிடித்துள்ளது.


திருச்சி மாவட்டத்தில் 5 மாநகராட்சி பள்ளிகள் மற்றும் ஒரு நகராட்சி பள்ளி உள்பட 192 அரசு பள்ளிகளும், 55 அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசின் பகுதி உதவி பெறும் 41 பள்ளிகளும், 135 தனியார் மெட்ரிக் பள்ளிகளும், 27 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், ஆதிதிராவிட பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப்பள்ளிகள் மூன்றும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒரு பள்ளியும் என மொத்தம் 455 உயர்நிலை பள்ளிகள் உள்ளன. இதில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் திருச்சி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 648 மாணவர்களும், 16 ஆயிரத்து 528 மாணவிகளும் என மொத்தம் 33 ஆயிரத்து 176 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்கள். இதில் 15 ஆயிரத்து 500 மாணவர்கள், 16 ஆயிரத்து 094 மாணவிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 594 பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


இதனை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் (2023-24) திருச்சி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 95.23% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.10%, மாணவிகள் 97.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தை பொறுத்துவரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 93.85 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.