தருமபுரி மாவட்டம் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே தனசேகரன் யாசின் தம்பதியினர் ஷாந்தினி, ஷபானா என பிள்ளைகளுடன் வசித்து வந்தனர். தனசேகரன், யாசின் இருவரும் ஏற்கனவே திருமணமானவர். ஆனால் கணவன் விவாகரத்து செய்ததால் தாய் வீட்டில் பெண் குழந்தையுடன் இருந்த யாசினை, தனசேகர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு, கடந்த 15 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்துள்ளார். லாரி ஓட்டுனர் ஆன தனசேகரனுக்கு மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்தபோது வெயிலின் தாக்கத்திற்காக அருகில் விற்பனை செய்த நுங்கினை வாங்கி சாப்பிட்டுள்ளனர். 


அப்பொழுது மனைவி யாசின் அதிக அளவில் நுங்கு வந்து வாங்கி வந்துள்ளார். அப்பொழுது அதிகளவு நுங்கு ஏன் வாங்கி வந்தாய் என்று கணவர் தனசேகர், யாசினிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு, முற்றி வாக்குவாதம் அதிகமாகியுள்ளது. அப்போது கோபமடைந்த தனசேகர் திடீரென கத்தி எடுத்து மனைவி யாசினை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் வயிறு, மார்பு, தொடை, முதுகு என 10 இடங்களில் யாசினுக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து தாயை கத்தியால் தாக்குவதை அறிந்த மூத்த மகள் ஷாந்தினி, தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஷாந்தினியை கத்தியால் தாக்கியுள்ளார்
 


இதில் ஷாந்தினிக்கு வயிறு, மார்பு, கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் ஷாந்தினி, யாசினி இருவரும் துடிதுடித்து அலறியுள்ளனர். தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, 108 மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். மேலும் மது போதையில் இருந்த தனசேகர், மனைவி, மகள் இருவரையும் கத்தியால் தாக்கியதை அறிந்த பொதுமக்கள் அவரை பிடித்து அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 



தொடர்ந்து படுகாயம் அடைந்த யாசின் மற்றும் ஷாந்தினி இருவருக்கும், அரூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனசேகரை ஏ.பள்ளிப்பட்டி காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே நுங்கு வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையில் கணவன், மனைவி, மகள் இருவரையும் கத்தியால் சரமாரியாக தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.