10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் 3 கேள்விகளுக்கு முறையான தலைப்புகள் வழங்கப்படவில்லை என்றும் மேலும் சில குளறுபடிகள் இருப்பதாலும் அவற்றுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
மாநிலம் முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளில் தமிழ் பாடத்துக்குத் தேர்வு நடைபெற்ற நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. 12,800 பள்ளிகளில் உள்ள 3,986 தேர்வு மையங்களில், சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதி வருகின்றனர். நாளை (ஏப்ரல் 12ஆம் தேதி) கணக்குப் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது.
இதற்கிடையே ஆங்கிலப் பாடத்தில் வழக்கமாக 1,2,3 ஆகிய கேள்விகள் SYNONYMS (அருஞ்சொல் பொருள்) ஆகவும் 4,5,6 ஆகியவை ANTONYMS (எதிர்ச் சொல்) ஆகவும் கேட்கப்படும். ஆனால் இன்று கேட்கப்பட்ட 4,5,6 ஆகிய கேள்விகளுக்கு மேலே, ANTONYMS என்று அச்சிடப்படவில்லை. இதனால் அருஞ்சொற் பொருளை எழுத வேண்டுமா அல்லது எதிர்ச் சொல்லை எழுத வேண்டுமா என்று மாணவர்கள் குழப்பமடைந்தனர்.
இதனால், 4, 5, 6 வினாக்களுக்கு பதில் எழுத முயற்சித்த அனைவருக்கும் 3 மதிப்பெண்கள் (GRACE MARKS) வழங்கப்பட வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழப்பத்துக்கு ஆளான மாணவர்கள்
அதேபோல தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் கூறும்போது, ''பகுதி 4, வினா எண் 28-ல் சாலை வழித்தடத்தில், செல்லக்கூடிய வழியில் அதை அடைப்பது போன்ற கோடு ஒன்று இருக்கிறது. ஆகவே மாணவர்கள் எப்படி பதிலளிக்க முடியும் என்று தெரியாமல் குழப்பத்துக்கு ஆளாகினர்'' என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கூறும்போது, ’’41ஆவது கேள்வியில் அரசு மாதிரி வினாத்தாள் மற்றும் நடைபெற்ற திருப்புதல் தேர்வுகளில் Notice writing என்று கேட்டுவிட்டு, பொதுத்தேர்வில் Report Writing கேட்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட வினாக்கள் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வினாத்தாளில் பிழையை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் உரிய மதிப்பெண் அளித்து மாணவர் நலன் காக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளது.
12ஆம் வகுப்பு வினாத்தாள் சர்ச்சை
ஏற்கனவே 12ஆம் வகுப்பு கணிதம் மற்றும் கணினி அறிவியல் வினாத்தாள் வடிவமமைப்பிலும் பல தவறுகள் இருந்தன. இதை அடுத்து பிளஸ் 2 பொதுத் தேர்வு கணிதப் பாடத்தில் கேள்வி எண் 47(b)-க்கு மாணவர்கள் பதிலளிக்க முயற்சித்து இருந்தாலே போதும். அதற்கு 5 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், 10ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத் தேர்வில் குழப்பமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் எழுத முயற்சித்த அனைவருக்கும் 3 மதிப்பெண்கள் (GRACE MARKS) வழங்கப்பட வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.